Jan 5, 2011

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 6

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!  - 6

இதில் 8 நாள் முதல் 10 நாள் முடிய விழா நடைபெறும் என உள்ளது.
 எட்டு நாள் எட்டாத நாள், பத்து நாள், பத்தாத நாள் என்றெல்லாம் இங்கு வேண்டா.
 'ஆவது என எழுத வேண்டியதுபோல் 'ஆம் என்றே எழுத வேண்டும்.
 8-ஆம் நாள்
 10-ஆம் நாள் என்றாவது
 எட்டாவது நாள்
 பத்தாவது நாள்
 என முழு எழுத்து வடிவிலாவது இருக்க வேண்டும்.

பயனாளிகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும் என இக்கோப்பில் உள்ளது. 'பயனாளிளுக்குத் தவறாமல் கொடுக்க வேண்டும் என வர வேண்டும்.

நான்காம் வேற்றுமை உருபான 'குவின் பின்னும் வல்லினம் மிகும். அஃதாவது  'கு என்னும் 4 ஆம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லின எழுத்து தொடங்கும் சொல் வந்தாலும் வல்லின மெய்யெழுத்துக் கூடுதலாக வரும்.
சான்றாக, 'மதுரை என்னும் சொல்லுடன் 'கு உருபு சேரும் பொழுது மதுரைக்கு என்றாகிறது.
மதுரைக்கு + கிடைத்தது = மதுரைக்குக் கிடைத்தது.
மதுரைக்கு + செல் = மதுரைக்குச் செல்.
மதுரைக்கு + தா = மதுரைக்குத் தா
மதுரைக்கு + பெருமை = மதுரைக்குப் பெருமை
என வரும்.
இவ்வாறு வரக்கூடிய இடங்களைத் தெரிந்து சரியாக எழுதி னாலேயே  எல்லா இடங்களிலும் சரியாக எழுதலாம்.
சான்றுகள் சில:

  1. பணிமனைக்குச் செல்ல வேண்டும்.
  2. மாவட்ட ஆட்சியகத்திற்குப் போய் வந்தேன்.
  3. மதுரைக்குத் திரண்டு வருக.    
  4. குழந்தைக்குத் தடுப்பூசி போட வேண்டும்.
  5. பணத்திற்குக் கணக்கு வேண்டும்.    
  6. தேர்வாணையத்திற்குத் தெரிவிக்க   வேண்டும்.
  7. நிரந்தப்படுத்துவதற்குத் தகுந்த சூழல்  . . .
  8. அலுவலகத்திற்குத் தெரிவிக்கவும்.
  9. அவருக்குப் பணியாளருடனான உறவு நன்றாக உள்ளது.
  10. வாங்குவதற்குக் கருதப்படும்.
  11. அரசுக்குப் பொருந்துகிறது.
  12. அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும்.
  13. நியமிப்பதற்குப் பொருத்தமானவர்.
  14. நியமனம் செய்யப் பெறுவதற்குப் பொருத்தமானவர்.
  15. குறியளவுக்கும் குறைவு.
  16. இலக்கிற்குக் குறைவு.
  17. அலுவலருக்குப் பணிந்தனுப்புக.
  18. பணியாளர்களுக்குக் கொடுக்கப்படுன்றனவா?
  19. நீண்ட காலங்களுக்குத் தேவையற்றது.    

இவ்வாறு செய்திகளில் 4 ஆம் வேற்றுமை உருபு இடம் பெறும் சில தொடர்கள் பின்வருமாறு அமையும் :-

  1. செயலகத்திற்குப் புதிய ஊழியர்கள் .....
  2. அரசிற்குப் பொதுமக்கள் வேண்டுகோள் ...
  3. ஊழியர்களுக்குப் பதிலாக  (மாற்றாக)
  4. நீக்கப்பட்டவர்களுக்குப் பதில்  (மாற்று)
  5. அலுவலகத்திற்குப் புதிய ஊழியர்....
  6. பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
  7. கோவிலுக்குச் சென்று ...  
  8. ஆகியோருக்குக் கொடுத்தார்.
  9. அணைக்குச் சென்று ....
  10. வெளிநாடுகளுக்குப் பெருமளவு....
  11. விவசாயத்திற்குத் தேவையான...
  12. முன்னேற்றத்திற்குத் தடை.
  13. ஈரானியப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்.  
  14. பத்திரிகைகளுக்குச் செய்தி சேகரித்தவர்.
  15. அரசு வேலைக்குத் தொடர்ந்து தேர்வு
  16. கூட்டத்திற்குப் பின்னர்
  17. வீரர்களுக்குத் தீவிரப்பயிற்சி    
  18. பேச்சு(வார்த்தை)க்குப் பின்னர்
  19. இராமர் கோயில் கட்டுவதற்குச் சட்ட...
  20. செய்தியாளர்களுக்குப் பேட்டி...
  21. செயல் திட்டத்திற்குக் கட்டுப்பட்டு...  
  22. கட்சிகளுக்குப் பங்கு ...
  23. நாமக்கல் நகருக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.    
  24. அவர் 20 மாவட்டங்களுக்குச் சென்று ...
  25. இரகசிய இடத்திற்குச் சென்று....
  26. வீட்டிற்குச் செல்கையில்
  27. வந்தவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு...   
  28. போராட்டத்திற்குத் தூண்டிய ...
  29. ரூபாய் 52 கோடி அளவிற்குச் சலுகை
  30. அவருக்குத் தொடர்பு உண்டா?
  31. பாசனத்திற்குத் தண்ணீர்..
  32. இடைவேளைக்குப் பிறகு...
  33. சிம்மராசிக்குக் குரு இடம்பெயர்தல்
  34. அவர்களுக்குப் போதிய வசதி .....
  35. ...ஆலங்குடிக்குச் சிறப்பு.
  36. காவல்துறையினருக்குத் தகவல்...
  37. இதற்குக் கண்டனம்....
  38. நாமக்கல் மாவட்டத்திற்குச் செல்கிறார்.
  39. கடலுக்குச் சென்றனர்.    
  40. பயணிகளுக்குப் புதியது.

No comments:

Post a Comment