Jun 10, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3: இலக்குவனார் திருவள்ளுவன்

      10 June 2026      



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2: தொடர்ச்சி)

இலக்கணக் குறிப்புகளையும் சொல்லாக்கங்களையும் தெரிவிக்கும் பாதையில் இனிச் செல்லலாம் என எண்ணினேன். ஆனால், நாளும் படிக்கின்ற செய்திகளைப் பார்க்கும் பொழுது உள்ளம் நாளும் வேதனை யுறுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டில் தமிழே இல்லாத நிலை விரைவில் வந்து விடும் என்று கவலையாக உள்ளது. ஆங்கிலவழிச் சிந்தனையாலும் ஆங்கிலவழியாகத் தமிழ்த் தட்டச்சை மேற்கொள்வதாலும் வரும் பிழைகளும் மண்டியுள்ளன. எழுதுபர்கள்தாம் கவனக் குறைவாலும் அறியாமையாலும் தவறாக எழுதுகிறார்கள என்றால் அவர்களுக்கு மேல்நிலையில் உள்ளவர்கள் அவற்றைப் பார்த்துத் திருத்த மாட்டார்களா? அல்லது செய்தி வந்தபின்னராவது படித்துப் பார்த்துத் தவறுகளைத் திருத்தமாட்டார்களா? இக் கொடுமைகளுக்கு எப்படித்தான் முற்றுப்புள்ளி இடுவது. ஊடகக்கொலைகளையே பார்த்தால் நாளும் நூற்றுக்கணக்கில் குறிப்பிட வேண்டும். எனவே, இந்தக் கட்டுரையுடன் இதற்கு நாமாவது முற்றுப்புள்ளி யிடலாம் என எண்ணுகிறேன்.

இப்போது நாம் மின்னிதழ்களில் காணும் சில கொலைச்செய்திகளைப் பார்ப்போம்.

“ஆனால், தற்போது வெளியாகியுள்ள சங்கீதா ஏப்ரல் 20ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்பிரல் 20ஆம் நாள் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்று இருக்க வேண்டும். ஆனால், “தற்போது வெளியாகியுள்ள சங்கீதா” என்றால் என்ன பொருள்? சங்கீதா என்பது திரைப்படத்தின் பெயரா? பாடற்தொகுப்பின் பெயரா? “இப்போது வெளியாகியுள்ள சங்கீதாவின் அறிக்கையில்” என்பதுபோன்று வந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

“சரிதாவைப் பொறுத்தவரை, நான் ஒரு தேசிய நட்சத்திரமோ அல்லது அவரது மனைவியாக இருப்பதற்காக அவர் பெருமைப்பட வேண்டிய ஒரு நடிகரோ அல்ல”

ஓ காரம்’ வந்தால் ‘அல்லது’ இடையில் தேவையில்லை. சரிதாவைக் குறிப்பிட்டு விட்டு அவரது மனைவியாக என்று குறிப்பிட்டால் சரிதாவின் மனைவியாக என்றல்லவா பொருள் வருகிறது. “சரிதாவைப்பொருத்தவரை, நான் ஒரு தேசிய நட்சத்திரமோ என் மனைவியாக இருப்பதற்காக அவர் பெருமைப்பட வேண்டிய நடிகரோ அல்லன்” என்று இருக்க வேண்டும்.

“இரட்டை இலை சின்னத்துடன் செக் மாதிரிகளை கைப்பற்றிய தேர்தல் ஆணையம்”

“இரட்டை இலைச் சின்னத்துடன் உள்ள காசோலை மாதிரிகளைக் கைப்பற்றிய தேர்தல் ஆணையம்”  என எழுதியிருக்கலாமே.

“மோடி கவர்மெண்ட் ஒரு ஃபெயிலியரை சந்திக்கும், டிபீட் ஆகும் இந்தப் பில்லுன்னு நினைச்சீங்களா?”

மோடி அரசு ஒரு குலைவைச் சந்திக்கும். இந்த வரைவம் தோல்வியுறும் என நினைத்தீர்களா? என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

bill என்றால் மசோதா என்கிறோம். தமிழில் சட்டவரைவு > வரைவம் என்பதே சரியாகும்.

“ஒரு பைனல் வார்னிங் அப்படின்னு சொன்னீங்க.”

(ஓர்) இறுதி எச்சரிக்கை என்று சொன்னீர்கள்.

“எதுவா இருந்தாலும் மெஜாரிட்டி இருக்கும்ன்னு நிறைவேத்திருவாங்க. ஆனா ஃபர்ஸ்ட் டைம் ஒரு பெரிய தோல்வியைச் சந்திச்சிருக்காங்க.”

எதுவாக இருந்தாலும் பெரும்பான்மை இருப்பதால் நிறைவேற்றிவிடுவார்கள். ஆனால், முதல் தடவையாக ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள் – என எழுதுவதே சரி.

“மோடியால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது.”

மோடியால் கட்டுப்படுத்தவே முடியாது.

“டிலிமிட்டேன் விவகாரத்தில,  நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தோல்வி அடைந்த பதட்டத்தில அவர் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறார்.”

தொகுதி மறுவரையறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் முதல் முறையாகத் தோல்வி அடைந்த பதற்றத்தில் இவர் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார் – இவ்வாறு எழுதுவதுதானே சரியாக இருக்கும்.

delimitation என்றால் வரையறை எனப் பொருள் என்றாலும் தொகுதி வரையறை என்ற பொருளிலேயே குறிக்கப்படுகின்றது. பதட்டம் என்பது தவறு. பதற்றம் என்றே குறிக்க வேண்டும்.

“திமுக கூட்டணியில் அதிமுக சார்பில் ஒருவரும் ….”

செய்தியைப் படித்ததுமே தவறு தெரிந்து விடுகிறது. அதிமுக கூட்டணியில் என்று இருக்க வேண்டும். ஆனால், இது போன்ற தவறுகளை நாளும் காணலாம்.

“ராஜ்யசபா எம்.பி”

மாநிலங்களவை உறுப்பினர் எனத் தமிழில் குறிப்பிடலாமே!

“மாஜி மந்திரிகள்”

முன்னாள் மந்திரிகள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் என்று குறிக்கலாமே!

“ஊட்டி, கொடைக்கானலுக்கு பாய் சொல்லிட்டு.. இந்த சம்மருக்கு பிளான் பண்ணவேண்டிய சூப்பரான மலைவாசஸ்தலங்கள்!”

பாய், படுக்கை என்று சொல்ல வேண்டுமா?

தலம் என்னும் தமிழ்ச்சொல்லுடன் ஸ் சேர்த்து ஸ்தலம் என ஆரியச் சொல்லாக்கி விட்டனர். எனினும் ஊட்டி, கொடைக்கானலுக்கு விடை கொடுத்துவிட்டு, இந்தக் கோடைக்குத் திட்டமிடவேண்டிய சிறப்பான மலைவாழிடங்கள் என்பதே சரியாகும்.

“தேயிலை தோட்டங்களால் சூழப்பட்ட குளுமையான இடம் மூணார்.”

மூணாறு, அடையாறு, பெரியாறு என்று குறிப்பிடாமல் மூணார், அடையார், பெரியார் என்றே தவறாக எழுதியும் பேசியும் வருகின்றோம். ஆறு எப்படி ஆர் ஆகும்.

தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட குளுமையான இடம் மூணாறு என்று இருக்கவேண்டும்.

“அவரை 5 வருடங்கள் ஒப்பந்தம் செய்தால் வரவில்லை.”

“அவரை 5 வருடங்கள் ஒப்பந்தம் செய்ததால் வரவில்லை” என்று இருக்க வேண்டும்.

“மே நாலந்தேதி சன்டை போட்டுக்கலாம்.”

நாலாந்தேதி -நாலாம் நாள் என்றெல்லாம் குறிக்காமல் அஃதென்ன நாலந்தேதி. அதென்ன சன்டை? சண்டை என்று கூட எழுதத் தெரியாதா?

“தமிழீசையின் வாக்கு பலிக்குமா?”

தமிழிசையின் வாக்கு பலிக்குமா? என்றுகூட குறிக்கத் தெரியாதா?

“அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வென்றுள்ளார்.”

இரு முறை பெயரைக் குறிப்பிட்டுச் செய்தியைக் குழப்புவானேன்?

எனது மகன், அவரது மகன் என்று சொல்லக் கூடாது.  மகன் உடைமைப் பொருளல்ல. எனக்கு மகன், அவருக்கு மகன் என்றுதான் வரவேண்டும். அவர் மகன் என்று சொன்னால் போதும்.

அவர் மகன் உதயநிதி தாலின், தான் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வென்றுள்ளார் எனலாமே!

“மாலை 6 மணி வரை நான் விஜய்யுடன் வீட்டில் தான் இருந்தார்.”

நான் எனத் தன்மையில் குறிப்பிட்டு விட்டு இருந்தார் எனப் படர்க்கையில் முடித்துள்ளது ஏன்?

மாலை 6 மணி வரை நான் விசய்யுடன் வீட்டில் தான் இருந்தேன் என்று வர வேண்டும். அல்லது மாலை 6 மணி வரை  விசய் வீட்டில் தான் இருந்தார் என வர வேண்டும்.

“இதன் காணமாகவே

 இதன் காரணமாகவே என்பதில் ‘ர’ எழுத்தைக் காணாமல் போக்கி விட்டார்கள்.  

 “என்னை வலுக்கட்டாயமாக கருவை செய்தார்.”

கருவை செய்தாரா?  கருக்கலைப்பு செய்தார் என்றுதானே இருக்க வேண்டும்.

  வலுக்கட்டாயமாக என் கருவைக் கலைத்தார் என்றல்லவா வர வேண்டும்.

“இதுதான் சிட்டிவேசன்”

situation என்பதையும் அறியாமல் தவறாமல் குறிப்பானேன்?

இதுதான் நிலைமை அலலது சூழ்நிலை என்று எளிதாகச் சொல்லலாமே!

“தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.

மாணவர்களுக்கு குட் நியூஸ்

நல்ல செய்தி அல்லது நற்செய்தி என்று கூட நல்ல தமிழில் எழுதத் தெரியாதவர்கள் எல்லாம் ஏன் எழுத்துப் பணிக்கு வருகிறார்கள். இது போன்ற செய்திகளைப் படிப்போர் கண்டித்தால்தான் இதழ் நிறுவனங்கள் நல்ல தமிழுக்கு முதன்மை தரும்.

“திருமணம் செய்து கொல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்பினார்கள்.”

யாரைத் திருமணம் செய்து யாரைக் கொல்ல வேண்டும் என விரும்பினார்கள்?

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றுகூட எழுதத் தெரியாதா? ஆனால், நாம் முன்னேரே இது போன்ற தவறுகளைச் சுட்டிக் காட்டியிருந்தோம். அப்படித்தான் செய்தியாளர்கள் தவறாக எழுதுகிறார்கள்.

“நேற்று நலமிலா இந்த வரை திருமணம் செய்து கொண்டார்”

நேற்று நலமில்லாது இருந்தவரை இன்று திருமணம் செய்து கொண்டாரா?

அல்லது நலமில்லாது இருந்தவரை நேற்று  திருமணம் செய்து கொண்டாரா?

நேற்று, நவமி இலதா (Navami Latha) என்பவரைத் திருமணம் செய்து கொண்டாரா என்று எழுதியிருக்க வேண்டும். பெயரைக்கூடச் சரியாக அறிந்து குறிப்பிட மாட்டார்களா?

ஓரிதழில் வந்த செய்திகளைத்தான் குறிப்பிட்டுள்ளேன். அனைத்து இதழ்களின் செய்திகளையும் பார்த்தோம் என்றால் கணக்கிலடங்காத் தவறுகளைக் காணலாம்.

இவற்றை யெல்லாம் களையும் நாள் எந்நாளோ? அந்நாளோ தமிழ்த்தாய் மகிழும் நாள்!

May 19, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2: இலக்குவனார் திருவள்ளுவன்



(கொல்லும் சொல் : ‘மாடல்’ – எண்ணுவோம் தமிழில் : தொடர்ச்சி)

“ராமே ஆண்டாலும்.. ராவணன் ஆண்டாலும்…”

என்பது அண்மையச் செய்தியிதழ்களில் காணக்கிடக்கும் தொடராகும்.

“இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டால் என்ன?”  என்பதுதான் வழக்கு மொழி.

“ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” எனத் தவறாகப் பெயரிட்டுத் திரைப்படம் ஒன்று வந்து விட்டது. இப்போது இந்தத் தப்பான தொடரையே எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

இதில்,… … ராசிபுரம், உள்ளிட்ட 17 தொகுதிகள்”

எனக் குறித்துள்ளனர்.

இச்செய்தியில் 17 தொகுதிகளின் பெயர்களும் இடம் பெற்று விட்டன. அப்பொழுது உள்ளிட்ட என்று குறிக்க வேண்டிய தேவை எங்கே வந்தது? ஆகிய தொகுதிகள் என்றுதானே குறித்திருக்க வேண்டும்.

உள்ளிட்ட என்பது தவறாகும். உட்பட என்றுதான் குறிக்க வேண்டும்.

ஆகிய, போல, முதலிய எனச் சொற்களின் பொருள் அறிந்து சரியான சொல்லைத் தெரிந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

உலகிலேயே டாப் சிட்டி இதுதான்… இங்க போனா மாஸா என்ஜாய் பண்ணலாம்;

லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் இருக்கா?

top என்னும் சொல், உயர்வு, உச்சி, முகடு, மேல், பம்பரம் முதலான பல பொருள்களைக் குறிக்கும். சிட்டி என்றால் நகரம். எனவே, டாப் சிட்டி என்றால் உயர்வான நகரம். இருப்பினும் பட்டியலில் இடம் பெறும் வரிசை அடிப்படையில் குறிப்பதால் உச்சியில் – முதலிடத்தில் உள்ளதை முதன்மை நகரம் என்பதே சரியாகும்.

சுற்றுலாவிற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் இடம் உள்ளதா? எனக் கேட்கப்படுகிறது. இருக்கா என்று எழுதுபவருக்குக் கிறுக்கா பிடித்திருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதா? இருக்கிறதா எனச் சொல்லும் அறிவு இருக்கிறதா எனக் கேட்கத் தோன்றுகிறதா?

மேற்குறித்தசெய்தியைப் பின்வருமாறு தெரிவிக்கலாமே!

உலகிலேயே முதன்மை நகரம் இதுதான். இங்கே போனால் பெரிதும் மகிழலாம். பட்டியலில் இந்தியாவிற்கு இடம் இருக்கிறதா?

இச்செய்திக்கு முன்னர் இயற்கை அழகில், கண்டு மகிழ, பொழுதுபோக்க, இனிய பயணத்திற்கு என எந்தச் சிறப்பு குறிக்கப்படுகிறதோ அந்தச் சிறப்பில் முதன்மையான நகரம் எனக் குறித்துள்ளது.

பழைய பஃச்(ஸ்) நிலையம், புதிய பஃச்(ஸ்) நிலையம் பகுதியில் ரோடு ஃசோ(ஷோ)

சென்று வேனில் நின்றபடி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

ஊருக்கு ஊர் பேருந்துநிலையம் என அதன் முகப்பில் எழுதியுள்ளதை எழுதியவரின் கண்கள் காணவில்லை போலும்.

சில கட்சியினரின் சதியால் ரோடு சோ என்பது திடீரென்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவர் மட்டும் தமிழில் குறிப்பிட்டுள்ளார். மன்னிக்கவும் யார் என்ற விவரம் நினைவில் இல்லை. இந்த ஆர்வம் பிறருக்கும் வேண்டும்.

ஊர்திகளில் ஊர்வலமாகச் சென்றால் ஊர்தி உலா எனலாம். அல்லது பரப்புரை உலா என்னும் பொருளில் சுருக்கமாகப் பரப்புலா எனப் புதுச்சொல்லை அறிமுகப்படுத்தலாம்.

பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம்  பகுதியில் சாலை வலம் /  ஊர்தி வலம் சென்று மூடுந்தில் நின்றபடி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை யாற்றுகிறார். அல்லது மேற்கொள்கிறார் எனலாம்.  இரு வெவ்வேறிடங்களில் உள்ள பேருந்து நிலையங்களைக் குறிப்பதால் பகுதி என ஒருமையில் குறிப்பதை விடப் பகுதிகளில் என்பதே பொருத்தமாக இருக்கும்.

வேன்(van) என்பதை மூடுந்து என்பர். சிலர் கூண்டுந்து என்றும் குறிப்பிடுவர். மூடிய ஊர்தியில் இருந்து யாரைப் பார்க்க முடியும்? அல்லது யார்தான் இவரைப் பார்கக் முடியும்? மூடுந்தில் நின்றபடி எங்ஙனம் பரப்புரை மேற்கொள்ள இயலும்? குறுசுமையுந்தாக இருப்பின் நின்றுகொள்ள வாய்ப்பு இருக்கும். பொதுவாகத் திறவை உந்து எனலாம்

முன்னதாக தமிழ்நாடு உள்துறை அமைச்சர் தீரஜ் குமார், தலைமைச் செயலாளர்

முருகானந்தம், தமிழக டிஜிபி, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள்

மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.”

இவ்வாறு கவனமின்றித் தவறான தகவலுடன் செய்தி வருவதை நாளும் காணலாம். செய்தியாளர் உள்துறைச் செயலரை உள்துறைஅமைச்சர் ஆக்கி விட்டார்.

முன்னதாக அடுத்து வல்லினம் மிக வேண்டும். எனவே, முன்னதாகத் . . . என இருக்க வேண்டும்

DGP – காவல்துறைத் தலைமை இயக்குநர். தலைமைக் காவல் இயக்குநர் எனலாம். எனினும் தலைமை இயக்குநர் எனக் குறிப்பிடாமல் பொதுவாகக் காவல் துறையிலேயே காவல்துறை இயக்குநர் என்று தவறாகவே குறிப்பிட்டுள்ளனர். நான் அவர்களிடம் தெரிவித்த பொழுது சிலர் மாற்றி எழுதி வருகின்றனர்.

போலீசு கமிசனர்கள் – காவல் ஆணையர்கள் 

மாவட்ட எசுபிக்கள் – மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் > மாவட்டக் கண்காணிப்பாளர்கள்

எனப் பதவிப்பெயர்களையும் பதவிச்சுருக்கங்களையும் தமிழிலேயே குறிப்பிட வேண்டும்.

May 8, 2026

கொல்லும் சொல் : ‘மாடல்’ – எண்ணுவோம் தமிழில் : இலக்குவனார் திருவள்ளுவன்

      08 May 2026      



தி.மு.க.தலைவருக்கு ஆங்கில மோகம் உள்ளது அனைவரும் அறிந்ததே! “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” எனப் பேசி வந்தாலும் ஆங்கிலச்சொல் அறிமுகமானால் அதைத்தான் பயன்படுத்துபவர். விளம்பரங்களிலும் புதிய திட்ட முழக்கங்களிலும் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுவதும் அறிந்ததே. நாம் இதனைப் பன்முறை சுட்டிக்காட்டியுள்ளோம். சிலவற்றைக் கேட்டுக் கொண்டாலும் திராவிட மாடல் பெயர்ப் பற்று அவரை விட்டுப் போகவில்லை.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.   (திருவள்ளுவர்,திருக்குறள், ௪௱ – 400)

என்கிறார் திருவள்ளுவர்.

கல்விதான் கேடு தராத சிறந்த செல்வம். மற்றவை சிறப்பான செல்வம் ஆகா என்கிறார். ‘மாடு’ என்றால் சிறப்பு, பெருமை, பீடு(=பெருமிதம்) எனப் பொருள்கள்.  ‘மாடல்ல’ என்றால் சிறப்பல்ல, பெருமையல்ல எனப் பொருள்கள்.

“மாடல்(model) என்னும் ஆங்கிலச்சொல்லை அதற்குத் தமிழ்ச்சொல்லே இல்லாத மாதிரி அவ்வாறே பயன்படுத்துவது ஏன்?” எனப் பலரும் கேட்டாலும் செவி சாய்ப்பதில்லை. மதுரை உயர்நீதிமன்றக்கிளையிலும் நீதிபதிகள் “திராவிட மாடல் என்பதில் ஆங்கிலத்திற்கு மாற்றாக முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே!  …ஏன் ஆங்கிலச்சொல்லையே பயன்படுத்துகிறார்கள்” என்று கேட்டும்(24.04.2023) கேளாச் செவியாக இருந்து விட்டார்கள். நாமும்(30.05.2022) முன்பு திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே!” என அகரமுதல இதழில் இதழுரையில் வினா எழுப்பியிருந்தோம். மக்கள் சார்பாளர்கள் மூலம் அவர் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். இவ்வாறு பலர் கூறினாலும் எழுதினாலும் காதுகளையும் கண்களையும் இறுக மூடிக்கொண்டு, தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்று இருந்துவிட்டார்.

  Model – மாதிரி என்று சொல்லலாம். அல்லது இதன் அடிப்படையில் திராவிட மாதிரியம் எனலாம். மாதிரி தமிழல்ல என எண்ணித் தவிர்த்திருக்கலாம். அதற்கு வேறு தமிழ்ச்சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர ஆங்கிலச் சொல்லை யல்ல. எனினும், மாதிரி என்பதும் தமிழ்ச்சொல்தான். அல்லது முன்முறை என்றாவது நன்முறை என்றாவது பயன்படுத்தலாம்.

1957 இல் மதுரைத் தெப்பக்குளம் எதிரில்,  தியாகராசர் நன்முறை உயர்நிலைப் பள்ளி(THIAGARAJAR MODEL HIGH SCHOOL) என நன்முறை என்னும் நற்றமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கையில், அதுவும் நன்றாக மக்கள் உள்ளங்களில் பதிந்திருக்கையில் நாம் அச்சொல்லையே பயன்படுத்தி  திராவிட நன்முறை என்று சொல்லாமே எனக் குறிப்பிட்டிருந்தோம்.

நம் மொழி தமிழ், நம் இனம் தமிழ், நம் நாடு தமிழ்நாடு. எனினும் பகுத்தறிவு, பெண்ணுரிமை, சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, தன் மதிப்பு, குமுக நீதி முதலான மறுமலர்ச்சிப் பணிகள் என்பவற்றின்  குறியீடாகத் திராவிடம் பயன்படுத்தப்படுகிறது; எனவே, ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ‘சிறப்பில்லாத’ என்னும் பொருளைத் தமிழில் தரும் ‘மாடல்’ என்பதை ஆங்கில ஒலிபெயர்ப்பாகக் கூறுவது முறையல்ல அல்லவா? அதனை எப்படி ஏற்க இயலும்?

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.   (திருக்குறள், ௬௱௪௰௫ – 645)

என்கிறார் திருவள்ளுவர். ஆனால் வேறு கொல்லும் சொல் இல்லை என்பதறிந்து கொல்லும் சொல்லைப் பயன்படுத்தினால் எங்ஙனம் வெல்ல இயலும்? “ஒரு சொல் வெல்லும்! ஒரு சொல் கொல்லும்!” என்னும் நாட்டார் மொழி பட்டறிவில் உருவானதுதானே! அப்படியான கொல்லும் சொல்தானே ‘மாடல்’.

 “சொல்லில் என்ன இருக்கிறது” என்று எண்ணக்கூடாது? இதனை மூடநம்பிக்கையாகவும் கருதக் கூடாது. தமிழ்த்தென்றல் திருவிக முதலானவர்கள் சொல்லுக்கு மந்திர வலிமை உண்டு எனக் கூறியுள்ளனர்.

“குழந்தைகளுக்குத் தொடக்கத்திலேயே தமிழை அறிமுகப் படுத்துங்கள் எனக் கலைஞர் மு.கருணாநிதி அறிவுறுத்தியது எக்காலமும் நாம் பின்பற்ற வேண்டிய பொன்மொழியாகும். கலைஞரின் வழியினும் சிறப்பான வழியில் நடைபோடும் அவர் மைந்தனின் ஆட்சியில் அவரது பொன்மொழியைப் புறக்கணிக்கலாமா? எனவே, முதல்வர் மு.க.தாலின் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். திராவிடமாடல் என்பதில் உள்ள ‘மாடல்’ என்னும் சொல்லைத் தூக்கி எறியுங்கள். பிறருக்கு முன்மாதிரியாக இருப்பதைக் குறிப்பிட எண்ணினால் திராவிட முன்முறை எனக் கூறுங்கள். எப்பொழுதும் நிலையான நல்லாட்சி என்று தெரிவிக்க விரும்பினால் திராவிட நன்முறை எனக் கூறுங்கள்.” என்று முன்பு கூறியதையே இப்போதும் தெரிவிக்கிறோம்.

44th Fide Chess Olympiad 2022 chennai , ‘போலீசு அக்கா’, ‘நம்ம school’ / Namma School Foundation, நம்ம ஸ்கூல், “நம்ம  CHENNAI”, நிகழ்ச்சிக் கல்வெட்டுகளில் ஆங்கிலம், மேடைப் பதாகைகளில் ஆங்கிலம் என எங்கும் எதிலும் ஆங்கிலப் பயன்பாட்டைக் கண்டவர்கள்தானே நாம். எனவேதான், எண்ணுவோம் தமிழில் எழுதுவோம் தமிழில் என்பதைப் பின்பற்றவில்லை. தலைவர் எவ்வழி அவ்வழியே பிறரும்.

இவற்றையெல்லாம் ஆட்சி போனபின்பு சொல்வதாக எண்ணக்கூடாது.

அவரது தோல்வியால் பிறகட்சியினரும் தமிழ் நாட்டிற்கு அப்பாலும் -வெளிநாட்டினரும், பிற கட்சியினரும் வருத்தமுற்றுள்ளனர். இதற்குக் காரணம் ஓயாமல் சிறப்பில்லாத அரசு, பெருமையில்லாத அரசு என்று எங்கும் ஒலித்துக்கொண்டு இருந்ததுதான். என்பதைச் சுட்டிக்காட்டவே. எனவே, அடுத்து ஆட்சி வரும் வரை காத்திருக்க வேண்டா. கட்சித் தலைவர் என்ற முறையில் பிறருக்கு முன்மாதிரியாக இருந்து தமிழையே பயன்படுத்துக! ஆட்சியில் மீள அமரும் பொழுது எவ்வாறெல்லாம் கொல்லும் சொல்லை அகற்றி வெல்லும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இப்பொழுதே திட்டமிடுங்கள்.

உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக! உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக! உங்களையெல்லாம் தமிழ் மாது தயையுடன் இரட்சித்திடுக!

– தனித்தமிழ் ஆர்வலர், இதழாளர், விடுதலைப் போராளி சுப்பிரமணிய சிவா(ஞானபாநு, செப்டம்பர், 1915)

தமிழில் எழுதுக! தமிழில் பேசுக!

தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!

– தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்

இந்தியாவின் திசைகாட்டி மு.க.தாலின் தமிழ் வழிச்சிந்தனைக்கு நன்முறையாக இருந்து வழிகாட்டுவாராக!

May 5, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 24. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1: இலக்குவனார் திருவள்ளுவன்

      05 May 2026      



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23. எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு தொடர்ச்சி)

கோப்புகளில் உள்ளவற்றைப் பார்ப்பதற்குச் சிறிது இடைவெளிவிட்டு இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் குறித்துப் பார்ப்போம்.

தமிழைக் கொலை செய்வதில் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. தமிழ் ஆர்வம் மிக்க ஊடகத்தினர் இருந்தாலும் பெரும்பான்மையாகக் கொலைகாரர்களே உள்ளனர். இவர்களுக்கெல்லாம் கடுந்தண்டனை விதித்தால்தான் தமிழ் வாழும். எனவே, இனியாவது ஊடகத்தினர்  கொலைகாரர்களாக இல்லாமல் தமிழை வாழ வைப்பவர்களாக இருக்க வேண்டும்.

இதைப் படிப்பவர்களாவது உணர்வு பெற்று ஊடகத்தினரைத் திருத்துவார்களாக!

இப்பொழுது நாம் இதழ்களில் இடம் பெறும் பிழை மலிந்த செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 கட்டுரைகளிலும் செய்திகளிலும் இலக்கிய வரிகளை மேற்கோளாகக் காட்டுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அவற்றில் பிழைகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சான்றுக்கு ஒன்று.

“பாரதிதாசனின் “கண்ணீரின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒரு கடுகாம்” என்ற கருத்தை ஒட்டியே தான் இதை எழுதியதாக விளக்கம் கொடுத்தேன்” என்கிறார் செய்தி எழுத்தாளர். ஆனால்,

“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்”

என்பதுதான் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ள நயம் மிகுந்த வரிகள். கண்ணைக் கண்ணீராகக் காட்டிவிட்டார் செய்தி எழுத்தாளர். இதைப் பாடலாசிரியர் தவறாகச் சொன்னாரா? அல்லது செய்தியாளர் தவறாக எழுதிவிட்டாரா என்று தெரியவில்லை. எனினும் அச்சில் வரும்பொழுது சரியாக வருவதில் கருத்து செலுத்த வேண்டாவா?

“இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.”  என்றொரு செய்தி.

டிரெண்டு என்பதைத் தமிழிலேயே குறிக்கலாமே!

 trend என்பதற்குப் போக்கு, நாட்டம், பாங்கு, பான்மை எனப் பொருள்கள். எனினும் பெருமளவு வரவேற்பைப் பெற்றுப் பரவலாவதால் “இக்காணுரை இப்போது பரவலாகி வருகிறது” எனலாம்.

பலரும் தமிழ்ச்சொற்களை அறிந்திருந்தும் ஒலிபெயர்ப்புச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

சான்று சில:

“சார்கோல் மூலம் இயங்கும் இசுத்திரி பெட்டிகளையே நம்பியிருக்கிறார்கள்.”

அடுப்புக் கரியை அறியாதவரா செய்தியாளர்? ‘சார்கோல்’ என ஒலிபெயர்ப்பில் குறிப்பிட்டதற்குக் ‘கரி’ என்றே குறிக்கலாமே!

சாமீன் நிபந்தனையாக பாசுபோர்ட் முடக்க முடியாது’… அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு; ஐகோர்ட்

என்பது மற்றொரு செய்தி.

(ஞ்)சாமீன் என்னும் பாரசீகச் சொல்லின் முதன்மைப் பொருள் பிணை என்பதாகும்.

பிணை, பிணையம், பிணையாளி, பிணைக்கைதி முதலான பொருள்களில் இடத்திற்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றது. உத்தரவாதம், முன்பேறு, சான்று, சான்றாவணம், சான்றிதழ், நற்சான்று, சான்றுரை முதலாய பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

பிணை என்னும் நல்ல தமிழ்ச்சொல் இருக்க சாமீன் என்னும் அயற்சொல் எதற்கு? கடவுச்சீட்டு என்பது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகையில் பலரறிந்த தமிழ்ச்சொல்லைப் புறக்கணிப்பது ஏன்? உயர்நீதிமன்றம்தான் தமிழைப் புறக்கணிக்கிறது என்றால் உயர்நீதிமன்றம் என்று தமிழில் குறிக்கத் தயக்கம் ஏன்? “கடவுச்சீட்டை நிபந்தனையாக முடக்க முடியாது.  … அதிகாரிக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. – உயர்நீதிமன்றம்”  எனக் குறிக்கலாமே!

“ஆராகி கையெழுத்திடும் நிபந்தனை”  என்று ஒரு செய்தி.

 ஃகாசிர்(Hazir) என்பது அரபு மொழியில் இருந்து உருது, இந்தி, துருக்கி மொழிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இதுவே ஆசர் ஆனது. ஆயத்தமாக, கிடைக்கக்கூடிய, பணியில் இருத்தல், தோற்றம், வருகை புரிதல், ஒருவர் அல்லது ஒரு குழுமுன் தோன்றுதல், முன் நிற்றல், நேர் நிற்றல் என இடத்திற்கேற்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, வருகை புரிந்து கையெழுத்திடும் நிபந்தனை எனக் குறிக்கலாம்.

இந்தக் கிழவனை தலையணை வைத்துக் கொள்ளுங்கள்” என்றும்

சிலிண்டரை பற்ற வைத்து இந்தக் கிழவனைக் கொள்ளுங்கள்” என்றும் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

வைத்துக் கொள்ளுதல், எடுத்துக் கொள்ளுதல் என்பன போன்று பொருள் வரும் வகையில் தலையணை வைத்துக் கொள்ளுங்கள் என்பது சரிதானா? உயிரைப் பறித்தல் என்னும் பொருளில் உயிரை எடுக்கும் கொல்லுதலைக் கொள்ளுதல் என்பது சரியாகுமா? இதனைத் தவறாக இடம் பெற்ற எழுத்துப் பிழையாகக் கருதுவதா? அல்லது பொருள் புரியாமல் பயன்படுத்தும் சொற்பிழையாகக் கருதுவதா?

இரண்டாம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லினம் மிக வேண்டுமல்லவா? அப்படியானால் சிலிண்டரைப் பற்ற வைத்து என்றுதானே குறித்திருக்க வேண்டும்.

சிலிண்டர் என்பது gas cylinder என்பதன் சுருக்கம். gasoline cylinder என்றும் gas bottle என்றும் குறிப்பர். gas என்பது காற்றை அல்லது வளியைக் குறித்தாலும் இங்கே எரிவதற்குப்பயன்படுத்தப்படும் வாயுவையே குறிப்பிடுகிறது. அங்கிங்கு எனாதபடி எங்கும் வாய்த்துள்ள காற்றை வாயு என்பதும் தமிழே. எனவே, எரி வாயு, அதனால் எரிவாயு உருளை எனலாம். உருளையைப் பற்ற வைப்பது என்றால், உருளையைப் பற்ற வைப்பது அல்ல. உருளையில் உள்ள எரிவாயுவையே. எனவே, செய்தியில் எரிவாயுவைப் பற்ற வைத்து எனலாம்.

“தி.மு.க-வுக்கு கூடுதல் இடங்கள்: தந்தி டி.வி சர்வே ரிசல்ட்”

 என வந்துள்ளது.

சர்வே ரிசல்ட் என்பது இந்த இடத்தில் ஆய்வு முடிவைக் குறிக்கிறது. எனவே,

தந்தித் தொலைக்காட்சி ஆய்வு முடிவு எனலாம்.

 நான்காம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லெழுத்து மிகும் என்பது குறித்து முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். ‘தி.மு.க.வுக்குக் கூடுதல்’ என வர வேண்டும்.

“நெல்லை பயணிகளுக்கு குட் நியூஸ்… சென்னையில் இருந்து சிறப்பு ரயில்; டிக்கெட் போட செக் பண்ணுங்க”

என்பது ஒரு செய்தி.

ஊர்ப்பெயர்கள் பண்புத்தொகையாக வரும்பொழுது அடுத்து வரும்சொல் க,ச,த,ப என வல்லெழுத்தில் தொடங்கினால் வல்லெழுத்து மிகும். எனவே நெல்லைக்கு அடுத்து வல்லெழுத்து மிகுந்து

நெல்லைப்பயணிகள் என்று வர வேண்டும்.

செய்தியாளர்களுக்கு (குட்) நியூஸ் என்ற சொல்லுக்கான தமிழ்கூடத் தெரியாமல் இருந்தால் அது வெட்கக்கேடு அல்லவா?

இரயில் என்பது தண்டவாளத்தைத்தான் குறிக்கிறது.எனினும் பழக்கத்தில் தண்டவாளத்தில் செல்லும் தொடர் வண்டியைக் குறிக்கிறது. இதனைச் சுருக்கமாகத் தொடரி எனலாம்.

நெல்லைப்  பயணிகளுக்கு நல்ல செய்தி (அல்லது நற்செய்தி).      சென்னையில் இருந்து சிறப்புத்  தொடரி”  எனக் குறிப்பதே சிறப்பாகும்.

ticket என்றால் பொதுவான பொருள் சீட்டு, எனினும் இடத்திற்கேற்ப இரு சொல்லாக அமைந்து பயணச் சீட்டு, இசைவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு, குலுக்கல் சீட்டு என்பனபோல் குறிக்கப்பெறும். இங்கே பயணச்சீட்டைக் குறிக்கின்றது.  தொடரியில் இடம் கிடைக்கிறதா இல்லையா எனச் சரிபார்க்குமாறு செய்தி தெரிவிக்கிறது. எனவே, பயணச்சீட்டு கிடைக்கிறதா எனச் சரிபாருங்கள் எனலாம். அல்லதுஇன்னும் சுருக்கமாகப் “பயணச்சீட்டு கிட்டுமா எனப் பாருங்கள்”  எனலாம்.