Jan 4, 2011

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! -- 1


எண்ணுவோம் தமிழில்!  எழுதுவோம் தமிழில்!
 பேரன்புசால்அவையோருக்கு,
 வணக்கம்.
 பல்வகைப்பட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் இங்கே கூடியுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இங்கே நாம் வெறும் பொழுது போக்கிற்காகக் கூடவில்லை; பயன் ஆக்கத்திற்காகக் கூடியுள்ளோம்.
 உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றி யாவும் நம் வெற்றி என்ற எண்ணத்தில் கூடியுள்ளோம்; இன்றைய கலந்துரையாடல் மூலம் நம்மிடையே எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் கூடியுள்ளோம். தமிழ் தனக்குரிய நிலையை மீளப் பெறுவதற்கு நம் சந்திப்பு ஓர் உந்துதலாய் அமையும்; இலக்கை அடைவதற்குரிய பாதையில் முன்னேறிச் செல்ல உதவும். தமிழன்னை அரசாளுவதற்கு நாம் ஒவ்வொருவரும்,
                செந்தமிழே உயிரே நறுந்தேனே
                 செயலினை மூச்சினை உனக்களித்தேனே

என நாம் ஒவ்வொருவரும் நமது பங்களிப்பை அளித்து உவகை காண  இயலும்.

ஆட்சி மொழி வகுப்பு என்ற பெயரில்  அனைவரையும் அழைத்திருந்தாலும்
இதனை வகுப்பாகக் கருத வேண்டா; ஒருவர் மட்டும் உரை யாடும் கூட்டமாகவும் கருத  வேண்டா. ஒருவரோடு ஒருவர் கலந்து பேசும் சந்திப்புதான் இது. நாம் அறிந்தவற்றை ப் பகிர்ந்து கொள்ள - அறிந்து மறந்தவற்றை  நினைவு கூர ஒரு நல்ல வாய்ப்பு. எனவே, ‌ஐயம் வரும்போது வினா எழுப்பவும் ஒத்த வே று கருத்தோ வேறு முரணான கருத்தோ ஏற்படுகை யில்  உடனுக்குடன் தெரிவிக்கவும் தயங்கக் கூடாது.
  மேலும் இங்கு வெவ்வேறு துறைகளைச்  சார்ந்தவர்கள், போக்குவரத்துக் கழகங்கள், வாரியங்கள் முதலான அரசு சார் நிறுவனத்தினர், உள்ளாட்சித் துறையினர், பல்கலைக்கழகத்தினர் எனப் பல் திறப்பட்டோர் கூடியுள்ளோம்.
ஒரு துறையில் ஒரு கலைச் சொல்லுக்குரிய பொருள், வேறு துறைகளில்  வெவ்வேறு பொருளில் வழங்கப் படலாம். ஒரு துறையினர் நன்கு அறிந்த எளிய சொல், மற்றொரு துறையினருக்கு அறியப்படாத அரிய சொல்லாக இருக்கலாம். எனவே, மிகவும் நன்கறியப்பட்டவை குறித்துக் கூட இங்கு நாம் பேச வேண்டுமா என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டுகிறேன்.

இம்மேசையில் ஒவ்வொரு துறைக்கும் உரிய சிற்சிலக் கோப்புகள் எனப்பல உள்ளன. எனவே இவற்றின் அடிப்படையில்தான் நம் கலந்தரையாடல் அமையும். எனினும் இவற்றின் தொடர்பான, இணையான - முரணான செய்திகளும் இட பெற வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் இடபெறாத, ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் - அகற்றப்பட வேண்டிய ஐயங்கள் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் இருப்பின் உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்.
‘கோப்புகளைத் தொடுவதற்கு முன் ஒரு கேள்வி.
 ’வணக்கம்’ என்று சொன்னால் மட்டும் போதுமா, ’காலை வணக்கம்’ என்று சொல்ல வேண்டாமா?
* நல்ல கேள்வி
 ’வணக்கம்’ என்பது தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சொல். அடக்கத்தையும் பணிவையும் உணர்த்தும் பண்பைக் குறிக்கும் சொல். ஆங்கில முறையில் 'Good Morning, good-afternoon, good evening, good night என்பவையெல்லாம் வாழ்த்தும் முறையே ஆகும். அஃதாவது, இது நல்ல காலைப்பொழுதாக அமையட்டு ம். இந்தப் பிற்பகல் உங்களுக்கு நல்லதாய் அமையட்டும். இந்த மாலை உங்களுக்கு நல்லது அளிக்கட்டு ம். இந்த இரவு இனிய உறக்கத்தைத் தரும் நல்லிரவாய் அமையட்டும் என நம் விருப்பத்தை வாழ்த்தாக வெளிப்படுத்துகின்ற முறையாகும். இம் முறையைப் பின்பற்றிச் சரியாகக் கூறுவதாக எண்ணிப் பலரும் ’காலை வணக்கம்’  'மாலை வணக்கம்’ என்பனபோல் கூறுன்றனர்.
 ஆங்கில வழியில் எண்ணுவதால் பண்பாட்டுச் சிறப்பை உணராமல் இவ்வாறு தவறாகக் கூறி வருகிறோம். வணங்கல் எனின், ’ வந்தனை , பணிதல், தண்டன், வணக்கம், பரவல், இறைஞ்சல், தாழ்தல், காண்டல், வந்தித்தல், போற்றல்’, எனப் பல பொருள் ஆகும். இவை அனைத்தும் அடக்கத்தைப் புலப்படுத்துவன. எனவே வணக்கத்தைத் தெரிவிக்குபொழுது மற்றவர்பால் நல்லெண்ணம் கொண்டுள்ளதை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் இளையோர் மூத்தோரை வணங்கலாமேயன்றி வாழ்த்தக் கூடாது. அவ்வாறிருக்க ’ நல்லகாலையாக அமையட்டும்’ என்பதுபோல் வாழ்த்துவது எவ்வாறு ஏற்புடையதாகும். அல்லது குறிப்பிட்ட ஒரு பொழுதுதான் வணக்கமாக இருப்பேன். அஃதாவது 'காலை வணக்கம்’ என்றால் காலையில் மட்டும் வணக்கமாக இருப்பேன். பின்னர்ப் பிணக்கமாக இருப்பேன் எனப் பண்பாட்டிற்கு மாறாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? அத்துடன் வைகறை, சந்தி,கருக்கல், பகல், முற்பகல், உருமம் (உச்சிவெயில்) நண்பகல், பிற்பகல், படு ஞாயிறு, சாயுங்காலம், செக்கர், அந்தி, அந்திக்கருக்கல், பின்னந்தி, எற்பாடு இரவு, நள்ளிரவு, பின்னிரவு, முதலான பல்வேறு பொழுதுகள் தமிழில் இருக்க, சில பொழுது மட்டும் வாழ்த்தினால் போதுமா? எனவே இனியேனும் அயல்வழக்கைப் பின்பற்றி, காலைவணக்கம், பகல் வணக்கம் என்றெல்லாம் கூறாமல், நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பண்பாட்டுடன்
’வணக்கம்’ தெரிவிப்போம்.
 (தொடரும்)1 comment:

  1. Good Morning என்றால் இது நல்ல காலைப்பொழுது ஆகட்டும் என்று பொருள். என்றாலும் தமிழர் தமிழில்தான் ஏதாவது ஒரு வகையில் வணக்கம் சொல்லவேண்டும்.

    ReplyDelete