(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : தொடர்ச்சி)

இக்கோப்பில் இந்நிலத்தின் வடக்கு திசையில் கோயில் மனை உள்ளது என எழுதப் பெற்றுள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனத் திசைகளைக் குறிப்பிடும் திசைப்பெயர்கள் அடுத்து வல்லினம் மிகும்

வடக்கு + திசை = வடக்குத் திசை

கிழக்கு + கடல் = கிழக்குக்கடல்

மேற்கு + சுவர் = மேற்குச்சுவர்

வடக்கு + தெரு = வடக்குத்தெரு

தெற்கு + பக்கம் = தெற்குப்பக்கம்

கிழக்கு + பகுதி = கிழக்குப் பகுதி

மேற்கு + புறம் = மேற்குப் புறம்

தெற்கு + சாலை = தெற்குச் சாலை

கிழக்கு + குழு = கிழக்குக் குழு

மேற்கு + துறைமுகம் = மேற்குத் துறைமுகம்

வடக்கு + தோட்டம் = வடக்குத் தோட்டம்

தெற்கு + தோப்பு = தெற்குத் தோப்பு

மேற்கு + திசை = மேற்குத் திசை

தெற்கு + தோட்டம் = தெற்குத் தோட்டம்

வடக்கு + கோபுரம் = வடக்குக் கோபுரம்

மேற்கு + தோரணம் = மேற்குத் தோரணம்

தெற்கு + பக்கத்தில் – தெற்குப் பக்கத்தில்

என்பனபோல் வரும்.

இவற்றைத்தான் இலக்கண நூல்கள் கூறுகின்றன. இலக்கண நூற்பாக்களை எடுத்துச் சொன்னால் பலர் தங்களுக்கு உரிய அல்ல எனக் கேளாமல் இருந்து விடுவர். எனவேதான், இலக்கண விதிகளைச் சொலலாமல் எவ்வாறு எழுத வேண்டும் என்றுமட்டும் கூறுகிறேன்.

சான்றாகத் திசைப் பெயர்கள் தொடர்பான விதிகளைப் பார்ப்போம்.

திசையொடு திசையும் பிறவும் சேரின்

நிலைஈற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்,

றகரம் னலவாத் திரிதலு மாம்பிற   

எனத் திசைப்பெயர் குறித்த நன்னூல் நூற்பா 186 கூறுகிறது.

இந்நூற்பாவில் திசைப்பெயர்ப் புணர்ச்சி பற்றி நன்னூலார் நான்கு விதிகளைக் கூறியுள்ளார்.  அவற்றினைப்்பார்ப்போம்.

1. ஈற்று உயிர்மெய்யும் கவ்வொற்றும் நீங்குதல்

முதலில் உள்ள சொல் நிலை மொழி என்றும் அதனுடன் சேரும் சொல் வருமொழி என்றும் குறிக்கப் பெறும். நிலை ஈற்று என்றால் நிலைமொழியில் உள்ள ஈற்றெழுத்து, அஃதாவது கடைசி எழுத்து.

இங்கே ஈற்று உயிர்மெய்  என்பது திசைப்பெயர்களில் கடைசி எழுத்தாக வரும்  ‘கு‘ என்பதாகும். கவ்வொற்று என்றால், கு எழுத்தில் உள்ள  ‘க்‘  ஆகும்.

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

வடக்கு + மேற்கு = வடமேற்கு

வடக்கு + திசை = வடதிசை

வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்

வடக்கு + நாடு = வடநாடு

குடக்கு + மலை = குடமலை

குடக்கு + நாடு = குடநாடு

குணக்கு + நாடு = குணநாடு

என்பனபோல், கடைசி எழுத்தான கு , அதற்கு முந்தைய எழுத்தான க் ஆகியன நீங்கி வரு மொழியுடன் இணைந்து வரும்.

2. றகர மெய் னகர மெய்யாகத் திரிதல்

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு

தெற்கு + திசை =  தென்திசை(= தென்றிசை)

தெற்கு + குமரி = தென்குமரி

தெற்கு + நாடு =  தென்நாடு = தென்னாடு

என்பனபோன்று நிலைமொழியில் உள்ள தெற்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய் ‘கு’ நீங்கி, அதற்கு முந்தைய றகரமெய் னகர மெய்யாகத் திரிந்து வரும்.

3. றகர மெய் லகர மெய்யாகத் திரிதல்

மேற்கு + நாடு = மேல்நாடு

மேற்கு + திசை = மேல்திசை (= மேற்றிசை)

என  ஈற்று உயிர்மெய் ‘கு’ நீங்கி, அதற்கு முந்தைய றகரமெய் ‘ல்’ ஆக மாறியுள்ளது.

4. ழகரத்தில் உள்ள அகரஉயிர் நீங்கி முதல் எழுத்து நீளூதல்

கிழக்கு என்பதில் ‘க்கு’ நீங்கிய பின் உள்ள ‘கிழ’ என்பதில் ‘ழ’ எழுத்தில் உள்ள அகரம் நீங்கினால் ‘ழ்’ ஆகிறது. முதல் எழுத்து நீளுதல் என்றால் ‘கி’ என்பது நெடிலாகக் ‘கீ’ என மாறுதல். எனவே,’கீழ்’ என்றாகிறது.

எனவே,

கிழக்கு + திசை = கீழ்த்திசை

எடுத்துக்காட்டிற்காகக் கூறிய இலக்கண நூற்பா போன்று இலக்கணங்கள் கூறுவதைத்தான் நாம் கூறுகிறோம்.

மேலும் சிலவற்றையும் பார்ப்போம்.

மேல், கீழ் என வருவன ஐகாரம் பெற்று வருதலும் உண்டு.

சான்று:

மேல் + நாடு = மேலை நாடு

கீழ் + கடற்கரை = கீழைக் கடற்கரை

திசைப்பெயர்கள் பிறதிசைப் பெயர்களோடும், பிறபெயர்களோடும் சேரும்போது, மேலே கூறப்பட்டவை போன்று எத்தகைய விகாரமும் பெறாமல் இயல்பாய் நிற்றலும் உண்டு.

சான்று:

தெற்கு + வடக்கு = தெற்கு வடக்கு

கிழக்கு + மேற்கு = கிழக்கு மேற்கு

வடக்கு + திசை = வடக்குத் திசை

மேற்கு + திசை = மேற்குத் திசை

அதே நேரம் திசைப் பெயருடன் திசைப் பெயரைச் சேர்க்கும் பொழுது பின்வருமாறு முதலில் குறிக்கப்பெறும் (நிலை மொழி) திசைப்பெயரில் கடைசி இரண்டு எழுத்துகளான ‘க்கு’ மறைந்து வரும்.

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

வடக்கு + மேற்கு = வடமேற்கு

வடக்கு + திசை = வடதிசை

வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்

வடக்கு + நாடு = வடநாடு

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கும் வன்தொடர்க் குற்றியலுகரங்கள் ஆகும். குணக்கு, குடக்கு என்பனவும் வன்தொடர்க் குற்றியலுகரங்களே ஆகும்.  இவையும் திசைப்பெயர்கள். குணக்கு என்ற சொல், கிழக்குத் திசையைக் குறிக்கும்.  குடக்கு என்ற சொல் மேற்குத் திசையைக் குறிக்கும்.

ஆதலால், ‘க்கு’ நீங்கி  

குணக்கு + திசை = குண  திசை

குணக்கு + கடல் = குண கடல்

குடக்கு + திசை = குட திசை

குடக்கு + கடல் = குட கடல்

குடக்கு + மலை = குடமலை

குடக்கு + நாடு = குடநாடு

குணக்கு + நாடு = குணநாடு

திசைப்பெயர்ப்புணர்ச்சி வேறு வகையாகவும், அஃதாவது மேற்கு என்பது மேல் என்றும் கிழக்கு எ்ன்பது கீழ் என்றும் வரும்.

கிழக்கு + நாடு = கீழ்நாடு

கிழக்கு + திசை = கீழ்த்திசை

மேற்கு + உலகம் = மேலுலகம்

கிழக்கு + பக்கம் = கீழ்ப்பக்கம்

இவ்வாறாகத் திசைப்பெயர்கள் வரும் இடங்களில் எவ்வாறு எழுத வேண்டும் என அறிந்து கொண்டால் நாம் பிழையின்றி எழுதலாம்.