Showing posts with label எண்ணுவோம் தமிழில்!. Show all posts
Showing posts with label எண்ணுவோம் தமிழில்!. Show all posts

May 19, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2: இலக்குவனார் திருவள்ளுவன்



(கொல்லும் சொல் : ‘மாடல்’ – எண்ணுவோம் தமிழில் : தொடர்ச்சி)

“ராமே ஆண்டாலும்.. ராவணன் ஆண்டாலும்…”

என்பது அண்மையச் செய்தியிதழ்களில் காணக்கிடக்கும் தொடராகும்.

“இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டால் என்ன?”  என்பதுதான் வழக்கு மொழி.

“ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” எனத் தவறாகப் பெயரிட்டுத் திரைப்படம் ஒன்று வந்து விட்டது. இப்போது இந்தத் தப்பான தொடரையே எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

இதில்,… … ராசிபுரம், உள்ளிட்ட 17 தொகுதிகள்”

எனக் குறித்துள்ளனர்.

இச்செய்தியில் 17 தொகுதிகளின் பெயர்களும் இடம் பெற்று விட்டன. அப்பொழுது உள்ளிட்ட என்று குறிக்க வேண்டிய தேவை எங்கே வந்தது? ஆகிய தொகுதிகள் என்றுதானே குறித்திருக்க வேண்டும்.

உள்ளிட்ட என்பது தவறாகும். உட்பட என்றுதான் குறிக்க வேண்டும்.

ஆகிய, போல, முதலிய எனச் சொற்களின் பொருள் அறிந்து சரியான சொல்லைத் தெரிந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

உலகிலேயே டாப் சிட்டி இதுதான்… இங்க போனா மாஸா என்ஜாய் பண்ணலாம்;

லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் இருக்கா?

top என்னும் சொல், உயர்வு, உச்சி, முகடு, மேல், பம்பரம் முதலான பல பொருள்களைக் குறிக்கும். சிட்டி என்றால் நகரம். எனவே, டாப் சிட்டி என்றால் உயர்வான நகரம். இருப்பினும் பட்டியலில் இடம் பெறும் வரிசை அடிப்படையில் குறிப்பதால் உச்சியில் – முதலிடத்தில் உள்ளதை முதன்மை நகரம் என்பதே சரியாகும்.

சுற்றுலாவிற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் இடம் உள்ளதா? எனக் கேட்கப்படுகிறது. இருக்கா என்று எழுதுபவருக்குக் கிறுக்கா பிடித்திருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதா? இருக்கிறதா எனச் சொல்லும் அறிவு இருக்கிறதா எனக் கேட்கத் தோன்றுகிறதா?

மேற்குறித்தசெய்தியைப் பின்வருமாறு தெரிவிக்கலாமே!

உலகிலேயே முதன்மை நகரம் இதுதான். இங்கே போனால் பெரிதும் மகிழலாம். பட்டியலில் இந்தியாவிற்கு இடம் இருக்கிறதா?

இச்செய்திக்கு முன்னர் இயற்கை அழகில், கண்டு மகிழ, பொழுதுபோக்க, இனிய பயணத்திற்கு என எந்தச் சிறப்பு குறிக்கப்படுகிறதோ அந்தச் சிறப்பில் முதன்மையான நகரம் எனக் குறித்துள்ளது.

பழைய பஃச்(ஸ்) நிலையம், புதிய பஃச்(ஸ்) நிலையம் பகுதியில் ரோடு ஃசோ(ஷோ)

சென்று வேனில் நின்றபடி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

ஊருக்கு ஊர் பேருந்துநிலையம் என அதன் முகப்பில் எழுதியுள்ளதை எழுதியவரின் கண்கள் காணவில்லை போலும்.

சில கட்சியினரின் சதியால் ரோடு சோ என்பது திடீரென்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவர் மட்டும் தமிழில் குறிப்பிட்டுள்ளார். மன்னிக்கவும் யார் என்ற விவரம் நினைவில் இல்லை. இந்த ஆர்வம் பிறருக்கும் வேண்டும்.

ஊர்திகளில் ஊர்வலமாகச் சென்றால் ஊர்தி உலா எனலாம். அல்லது பரப்புரை உலா என்னும் பொருளில் சுருக்கமாகப் பரப்புலா எனப் புதுச்சொல்லை அறிமுகப்படுத்தலாம்.

பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம்  பகுதியில் சாலை வலம் /  ஊர்தி வலம் சென்று மூடுந்தில் நின்றபடி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை யாற்றுகிறார். அல்லது மேற்கொள்கிறார் எனலாம்.  இரு வெவ்வேறிடங்களில் உள்ள பேருந்து நிலையங்களைக் குறிப்பதால் பகுதி என ஒருமையில் குறிப்பதை விடப் பகுதிகளில் என்பதே பொருத்தமாக இருக்கும்.

வேன்(van) என்பதை மூடுந்து என்பர். சிலர் கூண்டுந்து என்றும் குறிப்பிடுவர். மூடிய ஊர்தியில் இருந்து யாரைப் பார்க்க முடியும்? அல்லது யார்தான் இவரைப் பார்கக் முடியும்? மூடுந்தில் நின்றபடி எங்ஙனம் பரப்புரை மேற்கொள்ள இயலும்? குறுசுமையுந்தாக இருப்பின் நின்றுகொள்ள வாய்ப்பு இருக்கும். பொதுவாகத் திறவை உந்து எனலாம்

முன்னதாக தமிழ்நாடு உள்துறை அமைச்சர் தீரஜ் குமார், தலைமைச் செயலாளர்

முருகானந்தம், தமிழக டிஜிபி, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள்

மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.”

இவ்வாறு கவனமின்றித் தவறான தகவலுடன் செய்தி வருவதை நாளும் காணலாம். செய்தியாளர் உள்துறைச் செயலரை உள்துறைஅமைச்சர் ஆக்கி விட்டார்.

முன்னதாக அடுத்து வல்லினம் மிக வேண்டும். எனவே, முன்னதாகத் . . . என இருக்க வேண்டும்

DGP – காவல்துறைத் தலைமை இயக்குநர். தலைமைக் காவல் இயக்குநர் எனலாம். எனினும் தலைமை இயக்குநர் எனக் குறிப்பிடாமல் பொதுவாகக் காவல் துறையிலேயே காவல்துறை இயக்குநர் என்று தவறாகவே குறிப்பிட்டுள்ளனர். நான் அவர்களிடம் தெரிவித்த பொழுது சிலர் மாற்றி எழுதி வருகின்றனர்.

போலீசு கமிசனர்கள் – காவல் ஆணையர்கள் 

மாவட்ட எசுபிக்கள் – மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் > மாவட்டக் கண்காணிப்பாளர்கள்

எனப் பதவிப்பெயர்களையும் பதவிச்சுருக்கங்களையும் தமிழிலேயே குறிப்பிட வேண்டும்.

Apr 15, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது- இலக்குவனார் திருவள்ளுவன்

 



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது-தொடர்ச்சி)

எத்தனைப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது என இக்கோப்பில் இடம் பெற்றுள்ளது. அத்தனை, இத்தனை,எத்தனை என்னும் சொற்கள் அடுத்து வல்லினம் மிகாது. சான்றுக்குச் சிலவற்றைப் பார்ப்போம். இச்சொற்கள் வரும் முழுத் தாெடரை அளிக்காமல் சுருக்கமாகவே பார்ப்போம்.

அத்தனை கடைகளும்

அத்தனை காவலர்களும்

அத்தனை கிணறுகளிலும்

அத்தனை கூடைகளில்

அத்தனை கைதிகளும்

அத்தனை சங்கங்களும்

அத்தனை சுருக்கங்களும்

அத்தனை சுவர்களிலும்

அத்தனை திரைப்படங்களிலும்

அத்தனை தோட்டங்களிலும்

அத்தனை படப்பெயர்களிலும்

அத்தனை படிகளிலும்

அத்தனை படையினரும்

அத்தனை பதவிகளும்

அத்தனை பரப்புரைகளும்

அத்தனை பழங்களா

அத்தனை பாதுகாப்பில்லங்களிலும்

அத்தனை பாதுகாவலர்களும்

அத்தனை பார்வையாளர்களும்

அத்தனை புகார்களிலும்

அத்தனை பெட்டிகளும்

அத்தனை பேரும்

இத்தனை குறிப்புகளா

இத்தனை செருப்புகளா

இத்தனை திரைப்படங்களா

இத்தனை திரைப்பாடல்களா

இத்தனை பந்துகளா

இத்தனை பயன்களா

இத்தனை பள்ளிகளா

இத்தனை பாடல்களா

இத்தனை பாலங்களும்

இத்தனை பாவலர்களா

இத்தனை பிளவைகளா

இத்தனை புகார்களா

இத்தனை புத்தகங்களா

இத்தனை பயிற்சிகளா

இத்தனை பொம்மைகளா

இத்தனை பேரா

இத்தனை பேருந்துகளுக்கும்

எததனை படைப்புகள்

எத்தனை காலம்

எத்தனை கிளிகள்

எத்தனை குடிசைகள்

எத்தனை குட்டைகள்

எத்தனை குளங்கள்

எத்தனை குற்றங்கள்

எத்தனை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்

எத்தனை குற்றவாளிகள்

எத்தனை குற்றவாளிகள்

எத்தனை கூண்டுகள்

எத்தனை கொலையாளிகள்

எத்தனை கோடுகள்

எத்தனை கோட்டங்கள்

எத்தனை சுருள்கள்

எத்தனை செய்திகள்

எத்தனை செல்வர்கள்

எத்தனை சேலைகள்

எத்தனை சோதனைகள்

எத்தனை தாள்கள்

எத்தனை திட்டங்கள்

எத்தனை திரைச்சீலைகள்

Dec 15, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்

      15 December 2025      கரமுதல



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : தொடர்ச்சி)

இக்கோப்பில் இந்நிலத்தின் வடக்கு திசையில் கோயில் மனை உள்ளது என எழுதப் பெற்றுள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனத் திசைகளைக் குறிப்பிடும் திசைப்பெயர்கள் அடுத்து வல்லினம் மிகும்

வடக்கு + திசை = வடக்குத் திசை

கிழக்கு + கடல் = கிழக்குக்கடல்

மேற்கு + சுவர் = மேற்குச்சுவர்

வடக்கு + தெரு = வடக்குத்தெரு

தெற்கு + பக்கம் = தெற்குப்பக்கம்

கிழக்கு + பகுதி = கிழக்குப் பகுதி

மேற்கு + புறம் = மேற்குப் புறம்

தெற்கு + சாலை = தெற்குச் சாலை

கிழக்கு + குழு = கிழக்குக் குழு

மேற்கு + துறைமுகம் = மேற்குத் துறைமுகம்

வடக்கு + தோட்டம் = வடக்குத் தோட்டம்

தெற்கு + தோப்பு = தெற்குத் தோப்பு

மேற்கு + திசை = மேற்குத் திசை

தெற்கு + தோட்டம் = தெற்குத் தோட்டம்

வடக்கு + கோபுரம் = வடக்குக் கோபுரம்

மேற்கு + தோரணம் = மேற்குத் தோரணம்

தெற்கு + பக்கத்தில் – தெற்குப் பக்கத்தில்

என்பனபோல் வரும்.

இவற்றைத்தான் இலக்கண நூல்கள் கூறுகின்றன. இலக்கண நூற்பாக்களை எடுத்துச் சொன்னால் பலர் தங்களுக்கு உரிய அல்ல எனக் கேளாமல் இருந்து விடுவர். எனவேதான், இலக்கண விதிகளைச் சொலலாமல் எவ்வாறு எழுத வேண்டும் என்றுமட்டும் கூறுகிறேன்.

சான்றாகத் திசைப் பெயர்கள் தொடர்பான விதிகளைப் பார்ப்போம்.

திசையொடு திசையும் பிறவும் சேரின்

நிலைஈற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்,

றகரம் னலவாத் திரிதலு மாம்பிற   

எனத் திசைப்பெயர் குறித்த நன்னூல் நூற்பா 186 கூறுகிறது.

இந்நூற்பாவில் திசைப்பெயர்ப் புணர்ச்சி பற்றி நன்னூலார் நான்கு விதிகளைக் கூறியுள்ளார்.  அவற்றினைப்்பார்ப்போம்.

1. ஈற்று உயிர்மெய்யும் கவ்வொற்றும் நீங்குதல்

முதலில் உள்ள சொல் நிலை மொழி என்றும் அதனுடன் சேரும் சொல் வருமொழி என்றும் குறிக்கப் பெறும். நிலை ஈற்று என்றால் நிலைமொழியில் உள்ள ஈற்றெழுத்து, அஃதாவது கடைசி எழுத்து.

இங்கே ஈற்று உயிர்மெய்  என்பது திசைப்பெயர்களில் கடைசி எழுத்தாக வரும்  ‘கு‘ என்பதாகும். கவ்வொற்று என்றால், கு எழுத்தில் உள்ள  ‘க்‘  ஆகும்.

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

வடக்கு + மேற்கு = வடமேற்கு

வடக்கு + திசை = வடதிசை

வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்

வடக்கு + நாடு = வடநாடு

குடக்கு + மலை = குடமலை

குடக்கு + நாடு = குடநாடு

குணக்கு + நாடு = குணநாடு

என்பனபோல், கடைசி எழுத்தான கு , அதற்கு முந்தைய எழுத்தான க் ஆகியன நீங்கி வரு மொழியுடன் இணைந்து வரும்.

2. றகர மெய் னகர மெய்யாகத் திரிதல்

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு

தெற்கு + திசை =  தென்திசை(= தென்றிசை)

தெற்கு + குமரி = தென்குமரி

தெற்கு + நாடு =  தென்நாடு = தென்னாடு

என்பனபோன்று நிலைமொழியில் உள்ள தெற்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய் ‘கு’ நீங்கி, அதற்கு முந்தைய றகரமெய் னகர மெய்யாகத் திரிந்து வரும்.

3. றகர மெய் லகர மெய்யாகத் திரிதல்

மேற்கு + நாடு = மேல்நாடு

மேற்கு + திசை = மேல்திசை (= மேற்றிசை)

என  ஈற்று உயிர்மெய் ‘கு’ நீங்கி, அதற்கு முந்தைய றகரமெய் ‘ல்’ ஆக மாறியுள்ளது.

4. ழகரத்தில் உள்ள அகரஉயிர் நீங்கி முதல் எழுத்து நீளூதல்

கிழக்கு என்பதில் ‘க்கு’ நீங்கிய பின் உள்ள ‘கிழ’ என்பதில் ‘ழ’ எழுத்தில் உள்ள அகரம் நீங்கினால் ‘ழ்’ ஆகிறது. முதல் எழுத்து நீளுதல் என்றால் ‘கி’ என்பது நெடிலாகக் ‘கீ’ என மாறுதல். எனவே,’கீழ்’ என்றாகிறது.

எனவே,

கிழக்கு + திசை = கீழ்த்திசை

எடுத்துக்காட்டிற்காகக் கூறிய இலக்கண நூற்பா போன்று இலக்கணங்கள் கூறுவதைத்தான் நாம் கூறுகிறோம்.

மேலும் சிலவற்றையும் பார்ப்போம்.

மேல், கீழ் என வருவன ஐகாரம் பெற்று வருதலும் உண்டு.

சான்று:

மேல் + நாடு = மேலை நாடு

கீழ் + கடற்கரை = கீழைக் கடற்கரை

திசைப்பெயர்கள் பிறதிசைப் பெயர்களோடும், பிறபெயர்களோடும் சேரும்போது, மேலே கூறப்பட்டவை போன்று எத்தகைய விகாரமும் பெறாமல் இயல்பாய் நிற்றலும் உண்டு.

சான்று:

தெற்கு + வடக்கு = தெற்கு வடக்கு

கிழக்கு + மேற்கு = கிழக்கு மேற்கு

வடக்கு + திசை = வடக்குத் திசை

மேற்கு + திசை = மேற்குத் திசை

அதே நேரம் திசைப் பெயருடன் திசைப் பெயரைச் சேர்க்கும் பொழுது பின்வருமாறு முதலில் குறிக்கப்பெறும் (நிலை மொழி) திசைப்பெயரில் கடைசி இரண்டு எழுத்துகளான ‘க்கு’ மறைந்து வரும்.

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

வடக்கு + மேற்கு = வடமேற்கு

வடக்கு + திசை = வடதிசை

வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்

வடக்கு + நாடு = வடநாடு

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கும் வன்தொடர்க் குற்றியலுகரங்கள் ஆகும். குணக்கு, குடக்கு என்பனவும் வன்தொடர்க் குற்றியலுகரங்களே ஆகும்.  இவையும் திசைப்பெயர்கள். குணக்கு என்ற சொல், கிழக்குத் திசையைக் குறிக்கும்.  குடக்கு என்ற சொல் மேற்குத் திசையைக் குறிக்கும்.

ஆதலால், ‘க்கு’ நீங்கி  

குணக்கு + திசை = குண  திசை

குணக்கு + கடல் = குண கடல்

குடக்கு + திசை = குட திசை

குடக்கு + கடல் = குட கடல்

குடக்கு + மலை = குடமலை

குடக்கு + நாடு = குடநாடு

குணக்கு + நாடு = குணநாடு

திசைப்பெயர்ப்புணர்ச்சி வேறு வகையாகவும், அஃதாவது மேற்கு என்பது மேல் என்றும் கிழக்கு எ்ன்பது கீழ் என்றும் வரும்.

கிழக்கு + நாடு = கீழ்நாடு

கிழக்கு + திசை = கீழ்த்திசை

மேற்கு + உலகம் = மேலுலகம்

கிழக்கு + பக்கம் = கீழ்ப்பக்கம்

இவ்வாறாகத் திசைப்பெயர்கள் வரும் இடங்களில் எவ்வாறு எழுத வேண்டும் என அறிந்து கொண்டால் நாம் பிழையின்றி எழுதலாம்.

Dec 3, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு – தொடர்ச்சி)

நான்காம் வேற்றுமை உருபான ‘கு’ அடுத்து வல்லினம் மிகும் எனப் பார்த்தோம் அல்லவா? அதனால், நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு, தொடக்கத்திற்கு, முடிவிற்கு, முன்பு குறிப்பிட்டவாறு இடைவேளைக்கு அடுத்தெல்லாம் வல்லினம் மிகும்.  எனவே, பின்வருமாறு தொடர்கள் அமையும்.

நாளைக்குத் தொடக்கம்

இன்றைக்குத் தேர்வு

நேற்றைக்குப் பார்த்தது

தொடக்கத்திற்குப் பின்னர்

முடிவிற்குப் பிறகு

நாளைக்குத் திறப்பு விழா

நாளைக்குத் தொடங்கியதும்

நாளைக்குச் செல்லும் பொழுது

நாளைக்குப் பாடம் எடு

நாளைக்குப் பிறந்த நாள்

நாளைக்குச் சென்றதும்

நாளைக்குச் செல்லும் பொழுது

நாளைக்குத் திருமணம்

நாளைக்குப் பதியவும்

நாளைக்குக் கொடுக்கவும்

இன்றைக்குப் படித்த பின்னர்

இன்றைக்குப் படியெடுக்கவும்

இன்றைக்குப் போ

இன்றைக்குப் புகுவிழா

இன்றைக்குத் திரையிடுக

இன்றைக்குக் கல்லூரி விடுமுறை

இன்றைக்குப் பள்ளி விடுமுறை

இன்றைக்குச் சட்ட மன்றத்தில்

இன்றைக்குச் சட்டப் பேரவையில்

இன்றைக்குப் பேய்மழை

நேற்றைக்குக் கடும் வெயில்

நேற்றைக்குக் கோயிலில்

நேற்றைக்குப் பெய்த மழையில்

நேற்றைக்குச் சூழல்

நேற்றைக்குத் தொடங்கியதும்

நேற்றைக்குப் பிரித்தனர்

நேற்றைக்குப் பேறுகாலம் முடிந்ததும்

நேற்றைக்குக் காவல் நிலையத்தில்

நேற்றைக்குப் பெற்றோர் சந்திப்பில்

நேற்றைக்குத் துணிக்கடையில்

நேற்றைக்குக் கையூட்டு பெற்றதால்..

நேற்றைக்குக் கரம் பிடித்தவர்

தொடக்கத்திற்குப் பின்னர்

தொடக்கத்திற்குச் செல்க

முடிவிற்குப் பிறகு

முடிவிற்குப் பிறகும்

இவ்வாறு வல்லெழுத்து மிகும் இடங்களை அறிந்தால் பிழையின்றிப் பேசவும் எழுதவும் இயலும்.

Nov 6, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு + சொல்லுதல் வகைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்




(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : : case, bail, receipt – தமிழில்:  தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு + சொல்லுதல் வகைகள்

? ‘Possessor of the land’ ‘owner of the Land;’ என்பனவற்றிற்கு என்ன சொல்லவேண்டும் எனக் கோட்டாசியர் அலுவலகத்தில் இருந்து ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

*** நல்ல கேள்வி. ஏனெனில் இரண்டிற்குமே நில உரிமையாளர் எனப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழப்பம் ஏற்படுகிறது.

‘Possessor of the Land’ என்றால் நில உடைமையாளர் என்றும்

owner of the Land’ என்றால் நில உரிமையாளர் என்றும் வேறுபடுத்திக் கூற வேண்டும். இருநிலையிலும் ஒருவரே இருக்கலாம். வெவ்வேறாகவும் இருக்கலாம். எனவே, இவ்வாறு நிலத்திற்கு உரிமையாளரை உரிமையாளராகவும் உரிமையாளராக இல்லாமல் பயன்பாட்டில் வைத்திருப்பவரை உடைமையாளர் என்றும் சொல்லுவதே சரியாகும்.

இக்கோப்பில் பிரேத விசாரணை அறிக்கை எனக் குறிக்கப்பட்டுள்ளது.

Inquest என்பதற்கு உசாவுதல் எனப் பொருள். என்றாலும் இங்கு இச்சொல் பிண ஆய்வு குறித்துக் குறிக்கின்றது. எனவே, பிண ஆய்வு அறிக்கை எனக் குறிக்க வேண்டும்.

? ஆங்கிலத்தில் ஒரு சொல்லில் குறிக்கப்படுவது தமிழில் இரண்டு, மூன்று சொற்சேர்க்கையாக உள்ளதே!

*** தமிழில் ஏழு எழுத்துக்களுக்கு மேல் எந்தத் தனிச் சொல்லும் இல்லை. இயற்கைப் பெயர்கள், உயிரினப் பெயர்கள் முதலியன மரம், செடி, கொடி, வேர், கொடி, கிளை, பூ, இதழ், காய், கனி, நாய், பரி, கரி, புலி, மான், ஆடு, மாடு, கிளி, குயில், மயில், முதலை, பாம்பு, பல்லி, குருவி, காகம் என்பன போன்று மிகுதியானவை பெரும்பாலும் நான்கு எழுத்துகளுக்குள் அடங்கிவிடுகின்றன.

நாம் தமிழ்ச் சொற்களில் உள்ள நுண்ணிய வேறுபாடுகளை உணராமலும் அயற்சொல் கவர்ச்சியாலும் தமிழை மறந்தமையால் சுருங்கிய சொல்லுக்கு மாற்றாக விரிந்த தொடரைக் கூறும் இழிநிலை ஏற்படுகிறது.

சுருக்கமான தமிழ்ச் சொற்கள் பல இருப்பினும் ஆங்கிலம் வழியாக எண்ணும் பழக்கம் வேரூன்றியமையால் விரிவாகத் தமிழில் கூறுகின்றோம்.

தமிழில் சொல்லுதல் என்பதற்கு இயம்பல், விரித்தல், மொழிதல், விளம்பல், பகர்தல், பன்னல், நவிறல், கத்துதல், உரைத்தல், கூறல், வாங்கல், குயிலல், புகர்தல், பேசல், நொடிதல், பிறழ்தல், பறைதல், செம்பல், அதிர்தல், பணித்தல், சொற்றல், ஆடல், எனப் பல பொருள்கள் உள்ளமையைப் பிங்கல நிகண்டு கூறுகிறது.

இவற்றில் ஒவ்வொன்றிற்கும் பல பொருள்கள் உள்ளன. சான்றாக இயம்பலைப் பார்ப்போம்.

கதையும் நுவலும் காதையும் கிளவியும் பணுவலும் அறையும் பறையும் வாணியும் கூற்றும் மொழியும் குயிற்றும் புகறலும் மாற்றமும் மறையும் நொடியும் பரவலும் இசையும் இயமும் பேச்சும் உரையும் எதிர்ப்பும் என்றிவை இயம்பல் ஆகும்” எனப் பிங்கல நிகண்டு 21 பொருள்களைக் கூறுகின்றது.

? அவ்வாறு சொல்லுதலைக் குறிக்க எத்தனைச் சொற்கள் உள்ளன?

அவ்வாறு பல சொற்கள் உள்ளன.  39 சொற்களை மட்டும் பார்ப்போம். இங்கே சொல்லப்போகும் சொற்களுக்கு மேலும் பல பொருள்களும் உள்ளன. இருப்பினும் ஒவ்வொரு பொருளை மட்டும் பார்ப்போம்.

  • அசைத்தல் – அசையழுத்தத்துடன் சொல்லுதல் (அசையழுத்தம்-accent);

  • அறைதல் – அடித்து (வன்மையாக மறுத்து);ச் சொல்லுதல்

  • இசைத்தல் – ஒசை வேறுபாட்டுடன் சொல்லுதல்

  • இயம்புதல் – இசைக் கருவி இயக்கிச் சொல்லுதல்

  • உரைத்தல் – அருஞ்சொற்கு அல்லது செய்யுட்குப் பொருள் சொல்லுதல்

  • உளறுதல் – ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்

  • என்னுதல் – என்று சொல்லுதல்

  • ஒதுதல – காதிற்குள் மெல்லச் சொல்லுதல்

  • கத்துதல் – குரலெழுப்பிச் சொல்லுதல்

  • கரைதல் – அழைத்துச் செல்லுதல்

  • கழறுதல் – கடிந்து சொல்லுதல்

  • கிளத்தல் – இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்

  • கிளத்துதல் – குடும்ப வரலாறு சொல்லுதல் குயிலுதல்,

  • குயிற்றுதல் – குயில்போல் இன்குரலில் சொல்லுதல்

  • குழறுதல் – நாத் தளர்ந்து சொல்லுதல்

  • கூறுதல் – கூறுபடுத்திச் சொல்லுதல்

  • சாற்றுதல் – பலரறியச் சொல்லுதல்

  • செப்புதல் – வினாவிற்கு விடை சொல்லுதல்

  • நவிலுதல் – நாவினால் ஒலித்துப் பயிலுதல்

  • நுதலுதல் – ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்

  • நுவலுதல் – நூலின் நுண்பொருள் சொல்லுதல்

  • நொடித்தல் – கதை சொல்லுதல்

  • பகர்தல் – பாண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்

  • பறைதல் – மறை(இரகசியம்); வெளிப்படுத்திச் சொல்லுதல்

  • பன்னுதல் – நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்

  • பனுவுதல் – செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்

  • புகலுதல – விரும்பிச் சொல்லுதல்

  • புலமபுதல – தனக்குத் தானே சொல்லுதல்

  • பேசுதல் – ஒருமொழியிற் சொல்லுதல்

  • பொழிதல் – இடைவிடாது சொல்லுதல்

  • மாறுதல் – உரையாட்டில் மாறிச் சொல்லுதல்

  • மிழற்றுதல் – மழலைபோல் இனிமையாய்ச் சொல்லுதல்

  • மொழிதல் – சொற்களைத் தெளிவாகப்பலுக்கிச் சொல்லுதல்

  • வலத்தல் – கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்

  • விடுதல் – மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல்

  • விதத்தல் – சிறப்பாய் எடுத்துச் சொல்லுதல்

  • விள்ளுதல் – வெளிவிட்டுச் சொல்லுதல்

  • விளைத்துதல் – (விவரித்துச்); சொல்லுதல்

  • விளம்புதல் – ஒர் அறிவிப்பைச் சொல்லுதல்

இத்தகைய தமிழ்ச் சொல் வளம் நம் அறிவு வளத்தையும் பண்பாட்டு வளத்தையும் நன்றாக உணர்த்துகின்றது. நமக்கே உரிய சொல்வளத்தைத் துறந்து விட்டு அயல்மொழியிடம் கடன் வாங்கி நம்மை நாமே இழிவாக நடத்திக் கொள்ளும் போக்கைக் கைவிட வேண்டும். “இனியேனும் நமது வளங்களை நாம் இழக்கக்கூடாது’ என உறுதி எடுத்துத் தமிழில் பேசும்பொழுது தமிழிலேயே பேசினாலும் தமிழில் எழுதும்பொழுது தமிழிலேயே எழுதினாலும்  தமிழில்  சுருக்கமாகவே விளக்க இயலும்

  00