Showing posts with label எழுதுவோம் தமிழில்!. Show all posts
Showing posts with label எழுதுவோம் தமிழில்!. Show all posts

Jun 18, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 28. ‘பக்கா’ பைத்தியம் பிடித்துள்ள மின்னிதழ்

      18 June 2026      



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3: தொடர்ச்சி)

நாளும் வெளிவரும் மின்னிதழ் ஒன்றுக்குப் ‘பக்கா’ பைத்தியம் பிடித்துள்ளது. செய்தியாளர்கள், எதற்கெடுத்தாலும் ‘பக்கா’ என்று அடைமொழி சேர்த்துச் செய்திகளைத் தருகின்றனர்.

‘பக்கா’ என்னும் உருதுச் சொல்லைச் சரியான, பெரிய, திருத்தமான, திருத்தமாக, செம்மையாக எனப் பல பொருள்களில் பயன்படுத்துகின்றனர். இத்தனைத் தமிழ்ச்சொற்களை இடத்திற்கேற்பப் பயன்படுத்துவதை விட்டு விட்டு உருதுச்சொல்லைப் பயன்படுத்தும் பைத்தியப் போக்கு எப்படி வந்தது?

 அண்மைய மாதங்களில் ‘பக்கா’ பைத்தியத்துடன் வெளிவந்துள்ள செய்திக் குறிப்புகளைப் பார்ப்போம்.

 ஐடிஐ (ITI) முடித்த தம்பிகளுக்குப் பக்கா மத்திய அரசு வேலை

பக்கா தட்டச்சுத் திறன் (Typing Speed) மற்றும் எம்எஸ் ஆபீஸ் நாலெட்ஜ்

பக்கா மாதாந்திரத் தொகுப்பூதியம் (Consolidated Pay)

தங்கச்சிகளுக்குப் பக்கா சான்ஸ்

 ‘பக்கா’ பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை

பள்ளி திறப்பதற்கு முன் ‘பக்கா’ ஆக்ஷன்!

 பக்கா தமிழ் படம் – பக்கா என்னும் பெயரில் வந்துள்ள தமிழ்ப்படத்தையும் இது குறிக்கிறது.

கரூரில் பக்கா பிளான் போட்டு மக்களைக் கொன்றுள்ளனர்

செங்கோட்டையன் சபதம்! – பக்கா ஸ்கெட்ச் பின்னணி!

விஷாலின் ‘ரத்னம்’ ட்ரெய்லர் பக்கா மாஸ்..!

பத்தாயிரம் ‘பட்ஜெட்டில்’ பக்காவான மொபைல்கள்… இதுல உங்க சாய்ஸ் எது?

இஸ்லாமிய கைதிகளோடு ஆர்.எஸ்.எஸ்.கைதிகளும் விடுதலை: ஆளுநரின் பக்கா பிளான்!

POCO M6 PRO: பட்ஜெட்டில் பக்காவான 5G ஸ்மார்ட் போன்!

பக்காவான பத்து விவகாரங்கள்!

பக்கா பிளானுடன் களமிறங்கும் பொன்னியின் செல்வன் 2 படக்குழு!

நேற்று திருமா… நாளை சீமான்… அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராமின் பக்கா ப்ளான்!

ரிஸ்க் தொகுதிகள்- ரிஸ்க் மாநிலம்: பாஜகவின் பக்கா பிளான்!

T20 WorldCup 2022: பாகிஸ்தானின் பக்கா ஸ்கெட்ச்… சொதப்பிய ஓபனர்கள்… துவம்சம் செய்த கிங் கோலி

பாராட்டு வாங்க மட்டும் பக்காவா வாங்க: அப்டேட் குமாரு

பக்கா: நிக்கி கல்ராணி ஒப்பந்தமான பின்னணி!

பக்கா ரசிகர்களை ஈர்க்க ‘பக்கா’ ப்ளான்!

.`பக்கா’ போட்டி!

இணைந்திருக்கும் படம் பக்கா

புதிய கடுமையான ஒழுங்குமுறை விதிகளை (New Punishment Rules 2026) வெளியிட்டுப் பக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜாவா தொழில்நுட்பத்தில் பக்கா அனுபவமும் உள்ள ஐடி வல்லுநர்களிடம்.. …  …

பக்கா ‘Hands-on’ பணி அனுபவம் (Relevant IT Experience)

பக்காவான புரோகிராமிங் நாலெட்ஜ் கட்டாயம் பாஸ்.

வொர்க்கிங் ப்ரொபஷனல்ஸ்க்கு இது ஒரு பக்கா சான்ஸ் பாஸ்!**

இப்போதிருந்தே பக்கா ‘Prepare’ பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க.

மிழில் பிற மொழிச்சொற்களையும் கிரந்த எழுத்துகளையும் கலந்து இதனை வெளியிடுவது வேதனையாகத்தான் உள்ளது. எனினும் ஊடகத்தினர் புரியும் கொலைச்செய்திகளை உள்ளவாறே வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் செய்திகளை எழுதி வெளியிடத் தெரியவில்லை என்றால் எதற்குத் தமிழ் இதழ் நடத்த வேண்டும்? எதற்குத் தமிழில் எழுதத் தெரியாதவர்களைச் செய்தியாளர்களாக அமர்த்த வேண்டும்.

தமிழைக் கொலை புரியும் மன நலங்குன்றியவர்களை மன நல மருத்துவமனையில் சேர்க்கலாமே! இல்லையேல் இவற்றைப் பார்க்கும் தமிழ்த்தாய்க்குப் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று அஞ்ச வேண்டி யுள்ளது.

Apr 15, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது- இலக்குவனார் திருவள்ளுவன்

 



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது-தொடர்ச்சி)

எத்தனைப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது என இக்கோப்பில் இடம் பெற்றுள்ளது. அத்தனை, இத்தனை,எத்தனை என்னும் சொற்கள் அடுத்து வல்லினம் மிகாது. சான்றுக்குச் சிலவற்றைப் பார்ப்போம். இச்சொற்கள் வரும் முழுத் தாெடரை அளிக்காமல் சுருக்கமாகவே பார்ப்போம்.

அத்தனை கடைகளும்

அத்தனை காவலர்களும்

அத்தனை கிணறுகளிலும்

அத்தனை கூடைகளில்

அத்தனை கைதிகளும்

அத்தனை சங்கங்களும்

அத்தனை சுருக்கங்களும்

அத்தனை சுவர்களிலும்

அத்தனை திரைப்படங்களிலும்

அத்தனை தோட்டங்களிலும்

அத்தனை படப்பெயர்களிலும்

அத்தனை படிகளிலும்

அத்தனை படையினரும்

அத்தனை பதவிகளும்

அத்தனை பரப்புரைகளும்

அத்தனை பழங்களா

அத்தனை பாதுகாப்பில்லங்களிலும்

அத்தனை பாதுகாவலர்களும்

அத்தனை பார்வையாளர்களும்

அத்தனை புகார்களிலும்

அத்தனை பெட்டிகளும்

அத்தனை பேரும்

இத்தனை குறிப்புகளா

இத்தனை செருப்புகளா

இத்தனை திரைப்படங்களா

இத்தனை திரைப்பாடல்களா

இத்தனை பந்துகளா

இத்தனை பயன்களா

இத்தனை பள்ளிகளா

இத்தனை பாடல்களா

இத்தனை பாலங்களும்

இத்தனை பாவலர்களா

இத்தனை பிளவைகளா

இத்தனை புகார்களா

இத்தனை புத்தகங்களா

இத்தனை பயிற்சிகளா

இத்தனை பொம்மைகளா

இத்தனை பேரா

இத்தனை பேருந்துகளுக்கும்

எததனை படைப்புகள்

எத்தனை காலம்

எத்தனை கிளிகள்

எத்தனை குடிசைகள்

எத்தனை குட்டைகள்

எத்தனை குளங்கள்

எத்தனை குற்றங்கள்

எத்தனை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்

எத்தனை குற்றவாளிகள்

எத்தனை குற்றவாளிகள்

எத்தனை கூண்டுகள்

எத்தனை கொலையாளிகள்

எத்தனை கோடுகள்

எத்தனை கோட்டங்கள்

எத்தனை சுருள்கள்

எத்தனை செய்திகள்

எத்தனை செல்வர்கள்

எத்தனை சேலைகள்

எத்தனை சோதனைகள்

எத்தனை தாள்கள்

எத்தனை திட்டங்கள்

எத்தனை திரைச்சீலைகள்

Nov 6, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு + சொல்லுதல் வகைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்




(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : : case, bail, receipt – தமிழில்:  தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு + சொல்லுதல் வகைகள்

? ‘Possessor of the land’ ‘owner of the Land;’ என்பனவற்றிற்கு என்ன சொல்லவேண்டும் எனக் கோட்டாசியர் அலுவலகத்தில் இருந்து ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

*** நல்ல கேள்வி. ஏனெனில் இரண்டிற்குமே நில உரிமையாளர் எனப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழப்பம் ஏற்படுகிறது.

‘Possessor of the Land’ என்றால் நில உடைமையாளர் என்றும்

owner of the Land’ என்றால் நில உரிமையாளர் என்றும் வேறுபடுத்திக் கூற வேண்டும். இருநிலையிலும் ஒருவரே இருக்கலாம். வெவ்வேறாகவும் இருக்கலாம். எனவே, இவ்வாறு நிலத்திற்கு உரிமையாளரை உரிமையாளராகவும் உரிமையாளராக இல்லாமல் பயன்பாட்டில் வைத்திருப்பவரை உடைமையாளர் என்றும் சொல்லுவதே சரியாகும்.

இக்கோப்பில் பிரேத விசாரணை அறிக்கை எனக் குறிக்கப்பட்டுள்ளது.

Inquest என்பதற்கு உசாவுதல் எனப் பொருள். என்றாலும் இங்கு இச்சொல் பிண ஆய்வு குறித்துக் குறிக்கின்றது. எனவே, பிண ஆய்வு அறிக்கை எனக் குறிக்க வேண்டும்.

? ஆங்கிலத்தில் ஒரு சொல்லில் குறிக்கப்படுவது தமிழில் இரண்டு, மூன்று சொற்சேர்க்கையாக உள்ளதே!

*** தமிழில் ஏழு எழுத்துக்களுக்கு மேல் எந்தத் தனிச் சொல்லும் இல்லை. இயற்கைப் பெயர்கள், உயிரினப் பெயர்கள் முதலியன மரம், செடி, கொடி, வேர், கொடி, கிளை, பூ, இதழ், காய், கனி, நாய், பரி, கரி, புலி, மான், ஆடு, மாடு, கிளி, குயில், மயில், முதலை, பாம்பு, பல்லி, குருவி, காகம் என்பன போன்று மிகுதியானவை பெரும்பாலும் நான்கு எழுத்துகளுக்குள் அடங்கிவிடுகின்றன.

நாம் தமிழ்ச் சொற்களில் உள்ள நுண்ணிய வேறுபாடுகளை உணராமலும் அயற்சொல் கவர்ச்சியாலும் தமிழை மறந்தமையால் சுருங்கிய சொல்லுக்கு மாற்றாக விரிந்த தொடரைக் கூறும் இழிநிலை ஏற்படுகிறது.

சுருக்கமான தமிழ்ச் சொற்கள் பல இருப்பினும் ஆங்கிலம் வழியாக எண்ணும் பழக்கம் வேரூன்றியமையால் விரிவாகத் தமிழில் கூறுகின்றோம்.

தமிழில் சொல்லுதல் என்பதற்கு இயம்பல், விரித்தல், மொழிதல், விளம்பல், பகர்தல், பன்னல், நவிறல், கத்துதல், உரைத்தல், கூறல், வாங்கல், குயிலல், புகர்தல், பேசல், நொடிதல், பிறழ்தல், பறைதல், செம்பல், அதிர்தல், பணித்தல், சொற்றல், ஆடல், எனப் பல பொருள்கள் உள்ளமையைப் பிங்கல நிகண்டு கூறுகிறது.

இவற்றில் ஒவ்வொன்றிற்கும் பல பொருள்கள் உள்ளன. சான்றாக இயம்பலைப் பார்ப்போம்.

கதையும் நுவலும் காதையும் கிளவியும் பணுவலும் அறையும் பறையும் வாணியும் கூற்றும் மொழியும் குயிற்றும் புகறலும் மாற்றமும் மறையும் நொடியும் பரவலும் இசையும் இயமும் பேச்சும் உரையும் எதிர்ப்பும் என்றிவை இயம்பல் ஆகும்” எனப் பிங்கல நிகண்டு 21 பொருள்களைக் கூறுகின்றது.

? அவ்வாறு சொல்லுதலைக் குறிக்க எத்தனைச் சொற்கள் உள்ளன?

அவ்வாறு பல சொற்கள் உள்ளன.  39 சொற்களை மட்டும் பார்ப்போம். இங்கே சொல்லப்போகும் சொற்களுக்கு மேலும் பல பொருள்களும் உள்ளன. இருப்பினும் ஒவ்வொரு பொருளை மட்டும் பார்ப்போம்.

  • அசைத்தல் – அசையழுத்தத்துடன் சொல்லுதல் (அசையழுத்தம்-accent);

  • அறைதல் – அடித்து (வன்மையாக மறுத்து);ச் சொல்லுதல்

  • இசைத்தல் – ஒசை வேறுபாட்டுடன் சொல்லுதல்

  • இயம்புதல் – இசைக் கருவி இயக்கிச் சொல்லுதல்

  • உரைத்தல் – அருஞ்சொற்கு அல்லது செய்யுட்குப் பொருள் சொல்லுதல்

  • உளறுதல் – ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்

  • என்னுதல் – என்று சொல்லுதல்

  • ஒதுதல – காதிற்குள் மெல்லச் சொல்லுதல்

  • கத்துதல் – குரலெழுப்பிச் சொல்லுதல்

  • கரைதல் – அழைத்துச் செல்லுதல்

  • கழறுதல் – கடிந்து சொல்லுதல்

  • கிளத்தல் – இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்

  • கிளத்துதல் – குடும்ப வரலாறு சொல்லுதல் குயிலுதல்,

  • குயிற்றுதல் – குயில்போல் இன்குரலில் சொல்லுதல்

  • குழறுதல் – நாத் தளர்ந்து சொல்லுதல்

  • கூறுதல் – கூறுபடுத்திச் சொல்லுதல்

  • சாற்றுதல் – பலரறியச் சொல்லுதல்

  • செப்புதல் – வினாவிற்கு விடை சொல்லுதல்

  • நவிலுதல் – நாவினால் ஒலித்துப் பயிலுதல்

  • நுதலுதல் – ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்

  • நுவலுதல் – நூலின் நுண்பொருள் சொல்லுதல்

  • நொடித்தல் – கதை சொல்லுதல்

  • பகர்தல் – பாண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்

  • பறைதல் – மறை(இரகசியம்); வெளிப்படுத்திச் சொல்லுதல்

  • பன்னுதல் – நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்

  • பனுவுதல் – செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்

  • புகலுதல – விரும்பிச் சொல்லுதல்

  • புலமபுதல – தனக்குத் தானே சொல்லுதல்

  • பேசுதல் – ஒருமொழியிற் சொல்லுதல்

  • பொழிதல் – இடைவிடாது சொல்லுதல்

  • மாறுதல் – உரையாட்டில் மாறிச் சொல்லுதல்

  • மிழற்றுதல் – மழலைபோல் இனிமையாய்ச் சொல்லுதல்

  • மொழிதல் – சொற்களைத் தெளிவாகப்பலுக்கிச் சொல்லுதல்

  • வலத்தல் – கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்

  • விடுதல் – மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல்

  • விதத்தல் – சிறப்பாய் எடுத்துச் சொல்லுதல்

  • விள்ளுதல் – வெளிவிட்டுச் சொல்லுதல்

  • விளைத்துதல் – (விவரித்துச்); சொல்லுதல்

  • விளம்புதல் – ஒர் அறிவிப்பைச் சொல்லுதல்

இத்தகைய தமிழ்ச் சொல் வளம் நம் அறிவு வளத்தையும் பண்பாட்டு வளத்தையும் நன்றாக உணர்த்துகின்றது. நமக்கே உரிய சொல்வளத்தைத் துறந்து விட்டு அயல்மொழியிடம் கடன் வாங்கி நம்மை நாமே இழிவாக நடத்திக் கொள்ளும் போக்கைக் கைவிட வேண்டும். “இனியேனும் நமது வளங்களை நாம் இழக்கக்கூடாது’ என உறுதி எடுத்துத் தமிழில் பேசும்பொழுது தமிழிலேயே பேசினாலும் தமிழில் எழுதும்பொழுது தமிழிலேயே எழுதினாலும்  தமிழில்  சுருக்கமாகவே விளக்க இயலும்

  00

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail, receipt – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: தொடர்ச்சி)


? case என்றால் என்ன பொருள்?


நீங்கள் எந்தத் துறை?

? மருத்துவத் துறை. case என்றால் வழக்கு என்கிறோமே. மருத்துவமனையில் case-history ஐ எவ்வாறு குறிப்பிடுவது?

‘case’ என்றால் பொதுவாக வழக்கு என்பதை நாமறிவோம். நிலை, நிலைமை, சூழ்நிலை, என்றும் பொருள்களுண்டு. எனவே, மருத்துவத்துறையில் நோய் நிலைமை, நோயர் நிலைமை என்பனவற்றைக் குறிக்கிறது. நிகழ்ச்சியையும் குறிக்கும். எனவே, நேர்வு, நேர்ச்சி, நிகழ்வுக்கூறு, நிகழ்வினம், நேர்வு வகை எனப் பல பொருள்களில் வருகிறது. வேற்றுமையையும் குறிக்கும். எனவே எட்டு வேற்றுமை உருபுகளிலும் வேற்றுமை என்ற பொருளில் வரும். பை, உறை, கூடு, பெட்டி என்ற பொருள்களிலும் வரும். செய்தி, காரியம், கேள்விக்குரிய பொருள், ஆராய்ச்சிக்குரிய பொருண்மை, தறுவாய், பண்பின் செயல்வடிவ நிகழ்வுக்கூறு, எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்க கூறு, தொழில்முறை தொகுதி, சுவர் முகப்புப் பொதிவு, புத்தக மேலட்டை, புத்தக மூட்டுப்பகுதி, அச்சகப் பொறுக்குத் தட்டு, சிதறு வெடியுறைக்குண்டு என மேலும் பல பொருள்கள் உள்ளன. வினைச்சொல்லாக வருகையில் பையில் போடு, உறையில் வை, பொதி, போர்த்து, தோலிட்டு மூடு என இடத்திற்கேற்ப பொருள் வரும்.

case-history நோய் நிலைக் குறிப்பு, நோய் வரலாறு என்னும் பொருளில் வரும். இதனை நோயாறு எனப் புதுச் சொல்லாகக் குறிக்கலாம். case-history என்பது குற்றவியலிலும் வரும். அதனால் சட்டத்துறை, காவல்துறை, நீதித்துறையில் இச்சொல் இடம் பெறும். இங்கெல்லாம் வழக்கு விவரம் என்னும் பொருளில் வருகிறது. சில இடங்களில் புலனாய்வு விவரம் என்றும் பொருள்படும். ஆளைச்சுட்டிக் கூறுவதாயின் வழக்கர் விவரம் எனலாம். இத்துறைகளில் நோயாறு என்பதுபோல் வழக்காறு என்று சொல்லக்கூடாது. சொன்னால் பொருள் பழக்கவொழுக்கம் என மாறிவிடும்.

மேலும், வழக்கத்தில் case என்னும் பொழுது அந்த case எவ்வாறு உள்ளது? இந்த case நிலையில் முன்னேற்றம் இல்லை என்பது போல் நோயின் தன்மையின் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு இல்லாமல், இந்த நோயர் நிலையில் முன்னேற்றம் உள்ளது; அந்த நோயர் நிலை மோசமாகிக் கொண்டு வருகிறது; என நோயர் அடிப்படையில் குறிப்பது நன்றாக இருக்கும்.

? suit case என்று கூறுகிறோமே…
பெட்டி என்னும் பொருளில் உடைப்பெட்டி என்று சொல்லலாமே. இது போல் brief case சிறு பெட்டி அல்லது கைப்பெட்டி என்று சொல்லலாம்.
தட்டச்சுப் பொறியில் விசைப்பலகையில் மேல் வரிசையில் உள்ள எழுத்துருக்களை upper case என்றும் கீழ் வரிசையில் உள்ளவற்றை lower case என்றும் குறிப்பிடுவர். இவற்றை முறையே மேலுரு என்றும் கீழுரு என்றும் சொல்லலாம். மேலும்,
in any case – எவ்வாறாயினும்
in case – என்ற நிலை ஏற்படுமானால், ஒருவேளை, எனில்
in that case – அந்நோ்வில்
make out a good case – சிறந்த காரணங்கள் அளி
என இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ள வேண்டும்.
சாமீனில்(‘ஜாமீனில்’) விடுவிக்கப்பட்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. Bail – பிணை என்பதை அறிவீர்கள் அல்லவா? பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றே குறிக்க வேண்டும். பிணையில் விடுவிக்கப்பட்டவர் bailor – பிணையர் என்றும் அவ்வாறு அவருக்குப் பிணை தருபவர் bailee – பிணைதருநர் என்றும் குறிக்கப் பெற வேண்டும். பிணை தருவது தொடர்பான பணிகளைப் பார்ப்பவர் bailiff – என்பவரையே அமீனா என்கிறார்கள். பிணைப்பணியாளர் அல்லது பிணை ஊழியர் என்று சொல்ல வேண்டும். சுருக்கமாகப் பிணைப்பணியர் > பிணையர் எனலாம். இவ்வாறு பிணையில் விடத்தக்கவாறு அமைந்த குற்றத்தை
Bailable offence பிணை விடு குற்றம் என்றும் பிணையில் விட இயலா நிலையிலான குற்றத்தை non-bailable offence – பிணைவிடாக் குற்றம் என்றும் கூற வேண்டும்.
Bailable Warrant – பிணைவிடு பிடியாணை
Warrant – பணிமுறை அதிகாரப் பத்திரம், (கைது) ஆணைப் பத்திரம் என்கின்றனர். பிணையுறுதி, பற்றாணை, பொறுப்புறுதி, சான்றாணை எனவும் கூறுகின்றனர். ஒரே சொல்லையே பயன்படுத்த வேண்டும். எனவே, பிடியாணை என்பதையே பயன்படுத்தலாம்.
பற்றுச் சீட்டு எனவும் பொருளுண்டு. பற்றுச்சீட்டு என்பது பணம் பெறுகைச் சீட்டு என்றும் பணம் கொடுப்புச் சீட்டு என்றும் பொருளாகும்.. முன்பு வரிக்கான ஒப்புகைக் சீட்டு எனில் அடைச்சீட்டு பிற பண ஒப்புகைக்கு ஒடுக்குச்சீட்டு என்றும் பயன்படுத்தியுள்ளனர். நாம் இவற்றை மீள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். இவற்றில் ஒடுக்கு என்பதற்கு மறைவிடம் என்றும் பொருள். எனவே, குளியலறை, கழிவறைகளுக்குத் தரும் பணச்சீட்டை ஒடுக்குச் சீட்டு எனலாம். ஆனால் அவ்வாறு பணச்சீட்டு எதுவும் தருவதில்லை. வில்லையை மட்டுமே தந்து திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். எனினும் அவ்வாறு பணச்சீட்டுதரும் இடங்களில் ஒடுக்குச்சீட்டு என்பதைப் பயன்படுத்தலாம்.

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : தொடர்ச்சி)

திவாலானவர் என இக்கோப்பில் குறிக்கப் பெற்றுள்ளது. திவால் தமிழ்ச் சொல்லல்ல.

insolvency – என்பது கடனைத் திருப்பச் செலுத்த இயலாமல் நொடித்துப் போன நிலையைக் குறிப்பதுநொடிப்பு என்று சொல்லலாம்இந்த நிலைக்கு ஆளானவர்   insolvent – நொடித்தவர்  எனலாம். இதற்கு நொடித்துப்போன என்றும் பொருளுண்டு. எனினும் பொதுவாக நாம்  நொடித்துப் போனவர் > நொடித்தவர் என்றே சொல்வோம்.

இதில் மைனர்  எனத் தமிழிலேயே குறிக்கப்பட்டுள்ளதுஅகவைக்கு  வராதவர்களைக் குறிக்கும்  minor இளம்படியர்  எனவும் அகவை வந்தவரைக் குறிப்பிடும்  major  பெரும்படியர் எனவும் கூறப்படுவர்.

இளவர், அகவை வராத,வயது வராத, சிறிய,உரிமை வயது எய்தாதவர், உரிமை வயது அடையாதவர் என்று பொருள்கள். கணக்கில் சிறிய, சிறு பகுதி என்றும் புள்ளியியலில் சிற்றணி என்றும் பொருள்கள்.

வழக்குகளில் மைனர் என்று வந்தால் என்ன சொல்ல வேண்டும்?

வழக்குகளைப் பொருத்த வரை  இவை முறையே சிறு வழக்குபெரு வழக்கு எனப்படும்.

 மைனர் என்றால் adolescent, juvenile  என்று சொல்கிறார்களே?

adolescent என்பது வளரிளம்பருவத்தினரையும்  juvenile என்பது இளஞ்சிறாரையும் குறிக்கும்.

adolescent என்றால் வளர்நிலைச் சிறார்>வளர்சிறார் எனலாம். வளர்சிறார் என்றால் எல்லாருமே வளருபவர்தாமே என்று சொல்லக்கூடாது. சொற்களை வரையறைப்படுத்தி வகைப்டுத்திக் கொள்ள வேண்டும். Adolescent-விடலை என்றும் கூறுகின்றனர். விடலைப்பருவம் என்பது பதினாறு முதல் முப்பது ஆண்டுவரையுள்ள பருவத்தைக் குறிப்பது. எனவே, adolescent என்பதற்கு விடலை பொருந்தாது.

 இளஞ்சிறார் என்பதை ஏற்றுக் கொள்வார்களா?

          நான் இளஞ்சிறார் நடுவர் மன்றத்தில்(Juvenile Court) நன்னடத்தை அதிகாரியாகப் பணியேற்ற உடன் இளஞ்சிறார் என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். அப்பொழுது ஒரு சாரார்  சிறுவர் என்றே சொல்லலாம் என்றார்கள். சிறுவர் என்பது பொதுவான சொல்லாகும்: சிறுவர்  என்பதன் பன்மை வடிவம் சிறார். அவரிலும் சிறு பருவத்தினரைக் குறிக்கும் வகையில் இளஞ்சிறார் என்பது சரிதான் என்று கூறிப் பயன்படுத்தி வந்தேன். அதனையே நீதிமன்றத்திலும் பின்னர் காவல் நிலையங்களிலும் பிற அலுவலகங்களிலும் ஏற்று இன்று தொலைக்காட்சி முதலான தகவல் ஊடகங்களிலும் இளஞ்சிறார் என்றே குறிப்பிடுகின்றனர். எனவே பயன்படுத்தப் பயன்படுத்த எச் சொல்லும் எளிமையானதுதான்.

          ? juvenile என்று சொல்லின் பொருளை இச்சொல் குறிக்காது. அப்படியே பயன்படுத்தினால் என்ன?

          ? நாமாகவே இவ்வாறு கற்பனையில் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொண்டு இவ்வாறு கருதுகிறோம். உண்மையில் தமிழில் ஆடவருக்குக் குழந்தை, காளை, குமரன், ஆடவன், மூத்தோன், மூதாளன் என 6 பருவங்களும் பெண்டிருக்குப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என 7   பருவங்களும் குறிக்கப் படுகின்றன. இத்தகைய பருவ வரையறையும் சொல்லாட்சியும் வேறு எந்த மொழியிலும் இல்லை. இதனைப் புரிந்து கொள்ளாமையால், தமிழில்  உள்ள பருவங்களை நாம் மறந்து  இவ்வாறு பிறமொழிக்கேற்ப சொல்லாட்சியைப் பயன்படுத்துவதில் இடர்ப்படுகிறோம்.

          post-mortem  – பிரேத விசாரணை என வந்துள்ளது.பிரேதம் என்பது தமிழ்ச் சொல்லன்று. பிணம் என்றே சொல்லலாம். சடலம் என்பது உடலைக் குறிக்கும். உடற்கூறு ஆய்வு என்பதால் உயிரற்ற உடல் என்ற பொருளில் சடலம் என்றே குறிக்கலாம்.

post-mortem report – இறப்பு விசாரணை என்று சொல்லலாமா?

அப்படிச் சொன்னால், எவ்வாறு இறந்தார் என்பது குறித்த புற உசாவலாக அமையும்.

 inquest எனப்படுவது   எவ்வாறு மரணம் நேர்ந்தது என்பது பற்றிய , உசாவுதலைக் குறிக்கும். அதுதான் இறப்பு விசாரணை, இறப்பு உசா. இங்கு இறந்த உடலை ஆய்வு செய்வதால் உடல ஆய்வு, பிண ஆய்வு  என்று சொல்ல வேண்டும்.

இப்பதிவேடு தமிழில் இருந்தாலும் minute book என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. நமக்குத் தெரியாத பொழுது ஆட்சிச் சொல்லகராதியைப் பார்த்தாவது அடுத்தவரிடம் கேட்டாவது தமிழில் எழுத வேண்டும் என்ற முயற்சி உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் குறிப்பான  minute நிகழ்(வுப்) பதிவு எனப்படும். நிகழ் பதிவைக் குறிக்கும்  minute book-  நிகழ்ச்சிப்பதிவேடு – நிகழேடு என்று அழைக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி வரிசையைக் குறிக்கும் agenda  நிகழ் நிரல் ஆகும்.

minute என்றால் நிமிடம் என்றுதானே பொருள்?

நிமையம், நுட்பமான; நுண்ணிய,மீச்சிறு, நுட்பமான, மணித்துளி,

குறுங் கோணஅளவு எனப் பல பொருள்கள் உள்ளன. இவைபோல் நிகழ்ச்சிப் பதிவையும் குறிக்கிறது. ஒவ்வொரு      நிமைய நிகழ்வையும் விடாமல் குறிக்க வேண்டும் என்பதற்காக இங்ஙனம் கூறுகிறார்கள் எனக் கருதத் தோன்றும். ஆனால், காலத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. சிறு குறிப்புகள் என்னும் பொருள் கொண்ட minuta scriptura என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து இச்சொல் உருவானது. கூட்டத்தின் குறிப்புகள் குறித்த ஆவணமே நிகழ் பதிவேடு.