Apr 15, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது- இலக்குவனார் திருவள்ளுவன்

 



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது-தொடர்ச்சி)

எத்தனைப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது என இக்கோப்பில் இடம் பெற்றுள்ளது. அத்தனை, இத்தனை,எத்தனை என்னும் சொற்கள் அடுத்து வல்லினம் மிகாது. சான்றுக்குச் சிலவற்றைப் பார்ப்போம். இச்சொற்கள் வரும் முழுத் தாெடரை அளிக்காமல் சுருக்கமாகவே பார்ப்போம்.

அத்தனை கடைகளும்

அத்தனை காவலர்களும்

அத்தனை கிணறுகளிலும்

அத்தனை கூடைகளில்

அத்தனை கைதிகளும்

அத்தனை சங்கங்களும்

அத்தனை சுருக்கங்களும்

அத்தனை சுவர்களிலும்

அத்தனை திரைப்படங்களிலும்

அத்தனை தோட்டங்களிலும்

அத்தனை படப்பெயர்களிலும்

அத்தனை படிகளிலும்

அத்தனை படையினரும்

அத்தனை பதவிகளும்

அத்தனை பரப்புரைகளும்

அத்தனை பழங்களா

அத்தனை பாதுகாப்பில்லங்களிலும்

அத்தனை பாதுகாவலர்களும்

அத்தனை பார்வையாளர்களும்

அத்தனை புகார்களிலும்

அத்தனை பெட்டிகளும்

அத்தனை பேரும்

இத்தனை குறிப்புகளா

இத்தனை செருப்புகளா

இத்தனை திரைப்படங்களா

இத்தனை திரைப்பாடல்களா

இத்தனை பந்துகளா

இத்தனை பயன்களா

இத்தனை பள்ளிகளா

இத்தனை பாடல்களா

இத்தனை பாலங்களும்

இத்தனை பாவலர்களா

இத்தனை பிளவைகளா

இத்தனை புகார்களா

இத்தனை புத்தகங்களா

இத்தனை பயிற்சிகளா

இத்தனை பொம்மைகளா

இத்தனை பேரா

இத்தனை பேருந்துகளுக்கும்

எததனை படைப்புகள்

எத்தனை காலம்

எத்தனை கிளிகள்

எத்தனை குடிசைகள்

எத்தனை குட்டைகள்

எத்தனை குளங்கள்

எத்தனை குற்றங்கள்

எத்தனை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்

எத்தனை குற்றவாளிகள்

எத்தனை குற்றவாளிகள்

எத்தனை கூண்டுகள்

எத்தனை கொலையாளிகள்

எத்தனை கோடுகள்

எத்தனை கோட்டங்கள்

எத்தனை சுருள்கள்

எத்தனை செய்திகள்

எத்தனை செல்வர்கள்

எத்தனை சேலைகள்

எத்தனை சோதனைகள்

எத்தனை தாள்கள்

எத்தனை திட்டங்கள்

எத்தனை திரைச்சீலைகள்

Feb 11, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: தொடர்ச்சி)

இக்கோப்பில் பெரியக் குளம் என்று உள்ளது. முன்பே  பெரிய, சிறிய ,நல்ல. கெட்ட, சிறியன, அல்லன, பெரியன, நல்லன. என்பவற்றின் பின்னும் வல்லினம் மிகாது எனக் கூறியிருந்தேன். அதுபோல் மேலும் சிலவற்றைப் பார்ப்போம்.

பெரிய குளம்; பெரிய குடும்பம்; பெரிய செய்கை; பெரிய திட்டம்;

பெரிய துறை; பெரிய தெரு; பெரிய தொல்லை;

பெரிய பாசனம்; பெரிய புத்தகம்;

சிறிய குடும்பம்; சிறிய குளம்; சிறிய குடிசை; சிறிய செய்கை;

சிறிய திட்டம்; சிறிய  துறை; சிறிய தொல்லை

சிறிய பண்ணை  சிறிய பதவி; சிறிய பாசனம்;

சிறிய புத்தகம் ; சிறிய தூவல்(சிறிய பேனா);

சிறு குடும்பம்; சிறு பெட்டிக் கடை; சிறு சேமிப்பு; சிறு கடை;    

சிறியன சிந்தியாதான் ; சிறியன செய்யற்க;

நல்ல கனவு; நல்ல திட்டம்; நல்ல துறை;

நல்ல பண்ணை; நல்ல பதவி; நல்ல பாசனம்;

நல்ல பார்வை; நல்ல புத்தகம்; நல்ல செய்கை;  

நல்ல செயல்; நல்லன தொடரும்; நல்லன செய்க;

கெட்ட செய்கை; கெட்ட செயல்; கெட்ட பயிர்;

கெட்ட கனவு; கெட்ட புத்தகம்; பெரியன பேணுக;

அல்லன களைக;

புதிய சிந்தனை; புதிய செயல்; புதிய தலைமுறை;  

கரிய கழுதை;  கரிய குதிரை; கரிய பன்றி ;

அரிய சிந்தனை; அரிய செயல்;அரிய பொருள்;

வறிய குடும்பம்;

என்றே ஒற்று மிகாமல் எழுத வேண்டும்.

தமிழிலக்கணத்தின்படி இவ்வாறு பெயரைச் சிறப்பிக்கும் அடையாக வருவதால், நல்ல, பெரிய போன்றவற்றைக் குறிப்புப் பெயரெச்சம் என்று கூறுவர். எனினும்  இக்கால மொழியியலார் பெயரடை(Adjective) என்பர் .எனவே, பெயர் அடை அடுத்து வல்லினம் மிகாது எனக் கருத்தில் கொள்ள வேண்டும்.

Feb 4, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’: சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

      04 February 2026      கரமுதல



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு : தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’:  சரிதானா?

???  ஐயா, ‘காலனி’ என்றாலும் குடியிருப்புதானே

அவ்வாறுதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். காலோனியா /colōnia  என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானதே காலனி/colony என்னும் சொல். உண்மையில் ‘காலனி’ என்பது குடியேற்றப் பகுதியைக் குறிக்கும். அஃதாவது, குடியேற்ற ஊர், குடியேற்ற நகர், குடியேற்ற நாடு என எல்லாமே ‘காலனி’தான். பிரித்தானிய ஆட்சியில் இந்தியாவே அவர்களின் ‘காலனி’யாகத்தான் இருந்தது.

வேறொரு நாட்டால் உருவாக்கப்பட்டு  ஆளப்படும் பகுதியே ‘காலனி’ ஆகும். வெளிநாட்டினர் ஒன்றாக வாழும் வகையில் ஒரு குழுவைக் குடியேற்றும் ஒரு நிலம் என்றும் சொல்லலாம்.

குடியேற்ற நாடு, குடியேற்றம், புதுக்குடியிருப்பு, கடல் கடந்த குடியமைப்பு, நாடு கடந்த குடியினம், வந்தேறு குடி, நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு, கட்டியாள்புலம், தொழிலாளர் தனிக் குடியிருப்பு, தனிக்குடியமைப்பு, குடியமைப்பிடம்,  கிரேக்கக் கடல்கடந்த குடியிருப்பு; குடியேற்ற நாடு, என்பவற்றுடன் இப்போதைய வழக்கத்தின் அடிப்படையில் குடியிருப்பு, கூட்டுவாழ்வு, சேரி, வாழிருப்பு  எனவும் இப்போது அகராதிகளில் குறிக்கப்பட்டுள்ளன.

colonial power – கட்டியாளும் வல்லரசு; colonialism – கட்டியாளுகை; colonialist laws – கட்டியாளும் சட்டங்கள்;  British colony – பிரித்தானியரின் கட்டியாள்புலம்;  என்று சொல்லப்படுகின்றன.

குடியேற்றப் பகுதி என்னும் பொருள் மாறி, இப்போது புதிதாக உருவாக்கப்படும் உள்நாட்டினருக்கான வாழ்விடமும் குடியிருப்பு என்றாகி விட்டது.சான்றாக

Labour Colony – தொழிலாளர் குடியிருப்பு,

Housing Board Colony – வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு என்பனபோல் பயன்பாட்டிற்கு வந்து விட்டன, பால இடங்களில் காலனி என்றே பதவிப்பெயரகளில் குறிக்கப்படுகின்ற தவறுகளும் இடம் பெறுகின்றன.

சான்றாகக் கலெக்டர் காலனி,டி.ஆர.ஓ.காலனி, ஆபிசர் காலனி, சர்வேயர் காலனி என்பனபோல் பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம். சில இடங்களில் காலணி எனத்தவறாகவும் பெயர்ப்பலகைகள் உள்ளன. காலில் அணியப்படும் காலணிக்கும் குடியிருப்புப் பகுதிக்கும் வேறுபாடு அறியாதவர்களாக மக்கள் உள்ளனர். எனவே, எல்லா இடங்களிலும் ஆட்சியர் குடியிருப்பு, மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பு, அலுவலர் குடியிருப்பு, நில அளவையர் குடியிருப்பு என்பன போல் தமிழிலேயே பெயர்ப்பலகைகள் குறிக்கப்பெற்றுப் பயன்பாட்டிற்கும் வர வேண்டும்.

உயிரியலில் bee colony- தேனீக் கூட்டம்

                        colony –  வாக்கம், குடியிருப்பு

வனத்துறையில்   

  Forestry            colony          தோப்பு (விதை/ஒட்டுமுறை)

மனை அறிவியலில்   micro colony      நுண்ணுயிர்க் குழுமல்

           colony hybridization    கூட்டுக் கலப்பினமாக்கம்

மருந்தியலில்           colony / bacterial colony            வளர்திரள்

கால்நடை அறிவியலில்   colony counter      நுண்மத் தொகுதிமானி

எனத் துறைச் சொற்களாக உள்ளன.

‘காலனி’யைச் சேரி என்றும் குறிப்பிடுகிறார்கள் அல்லவா? சேரி என்பது மக்கள் சேர்ந்து வாழும் பகுதியைக் குறிக்கும் நல்ல தமிழ்ச்சொல்.

கம்மாளர் சேர்ந்து வாழிடம் – கம்மாணசேரி

ஈழவர் சேர்ந்து வாழும் குடியிருப்பு – ஈழச்சேரி

வண்ணார் சேர்ந்து வாழிடம் – வண்ணாரச்சேரி

பிராமணர் குடியிருப்புப் பகுதி – பார்ப்பனச் சேரி

ஊர்த்தொடக்கத்தில் உள்ள புறவழிச்சேரி – தலைவாய்ச்சேரி

என்பன போல் வழக்கத்தில் இருந்துள்ளன.

“ஆலஞ்சேரி”(செங்கல்பட்டு), “வேளச்சேரி” (சென்னை), “மேச்சேரி”(சேலம்), “மட்டஞ்சேரி”(கொச்சி), “இரவுச்சேரி”( சிவகங்கை), “சங்கனாச்சேரி”(கேரளா), “பெரும்பச்சேரி”(பரமக்குடி), “ஒழிகினச்சேரி”(நாகர்கோவில்) என்பன போல் இப்போதும் நூற்றுக்கணக்கான ஊர்கள் உள்ளன.

சங்க இலக்கியங்களில் சேரி என்பது, சிற்றூர், தெரு, முல்லை நிலத்தூர் என்ற பொருள்களிலும் குறிக்கப்பெற்றள்ளன.

ஆனால் இப்பொழுது ‘காலனி’ / சேரி என்றால்

ஏழை எளிய மக்களால் குடியிருப்பிடமாகக் கொள்ளப்பட்ட பகுதி. இப்பகுதி ஒழுங்கு குலைந்த குடும்பங்கள், தரக்குறைவான குணாதிசயங்கள், ‘சுகாதார’மற்ற நிலைகள். அதிக மக்கள் தொகை மற்றும் சமூக ஒழுங்கு முறையற்ற தன்மை ஆகியவற்றை உடையதாகக் காணப்படும் என்று அகராதிகளில் குறிக்கும் நிலைக்கு வந்துள்ளது.

மேலும், தீண்டப்படாதார் சேர்ந்து வாழிடம், தீண்டாச்சேரி என்றும் குறிக்கப்பெறும் இழிநிலைக்கு வந்துள்ளது. ஒரு புறம் அதிகாரிகள் குடியிருப்புப்பகுதி ‘காலனி’ என அழைக்கப்பெற்றாலும்  அதற்கு முன்னரே ‘காலனி’-சேரி என்றால் தீண்டாதவர் வாழும் பகுதி என்று பழக்கத்திற்கு வந்து மன்பதையில் ஒரு பகுதியினரை இழிவாகக் கூறும் பழக்கம் வந்து விட்டது. எனவேதான், தமிழ்நாடு அரசு ‘காலனி’ என்று சொல்லும் பழக்கத்தை முற்றாக்கும் ஆணை பிறப்பிக்க உள்ளது.

“மண்ணின் ஆதிக் குடிகள் குறித்துத் தவறாக விளக்கும் வகையில் காலனி என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாகக் காலனி என்ற சொல் இனி நீக்கப்படும்” எனத் தமிழ்நாட்டு முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அரிசனக் காலனி என்று இருந்தால்  பூக்கள், மரங்கள், வரலாறு, நிலமபோன்றவற்றின் பெயர்கள் சூட்டத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், காலனி என்பதற்கு மாற்றான சொல்லைப்பற்றிக் குறிக்வில்லை. முதல்வர் ஆறிவித்து ஒராண்டாகியும் ஆணை பிறப்பிக்கவில்லை என்றும் இதகால், காலனி என்ற பெயரே நீடிக்கிறது. இது குறித்துத் தினமலர் நாளிதழும் கவலை தெரிவித்துள்ளது.

மக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்குக் காலனி என ஆங்கிலத்தில் குறிப்படும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். காலனி என்னும் பயன்பாட்டையும் நீக்க வேண்டும். ஆங்கிலத்திலும் தமிழிலும் காலனி என்றே குறிக்கப்பட்டிருப்பின்  அவற்றைக் குடிமனைகள் என்று மாற்ற வேண்டும்.

Feb 1, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்

 



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : தொடர்ச்சி)

இக்கோப்பில் ‘ஆபிசர் குவார்ட்டர்சு’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அலுவலர் குடியிருப்பு என்று தமிழில் குறி்த்திருக்க வேண்டும்.

???? ‘குவார்ட்டர்’ என்றால் கால் என்று பொருளில்லையா?

ஆம். அவ்வாறும் பொருள் உள்ளது. அவ்வாறு பார்த்தால் காலாண்டுகள் என வர வேண்டும். ஆனால், இடத்திற்குத்தகுந்த பொருளைக் குறிக்க வேண்டுமல்லவா

Quarters  என்றால்,

உறையுள், உறைவிடம், குடியிருப்பு, படைத்தங்கல் இடம்,குடியிருப்பில்லம்; குடியிருப்புகள்;தங்குமிடம்

எனப் பல பொருள்கள். இருப்பினும் நாம் குடியிருப்பு என்ற சொல்லையே பொதுவாகக் கையாள்கிறோம். எனவே, அலுவலர் குடியிருப்பு என்று குறித்தலே நன்று.

???? Furnished quarters  என்று சொல்கிறார்களே!.

வீட்டிற்கு வேண்டிய நாற்காலி, மேசை முதலியனவும், தண்கலன், சலைவப்பொறி முதலிய தேவையான துணைப்பொருள்களும் அமைந்த குடியிருப்பு அவ்வாறு Furnished quarters என அழைக்கப்பெறும். அறைகலன்களுடன் அமைந்த குடியிருப்பு என்று சுருக்கமாகக் குறிக்கப்பெறுகிறது.

இன்னும் சுருக்கமாக நாம் அனைத்தும் நிறைந்த குடியிருப்பு என்னும் பொருளில் நிறை குடியிருப்பு எனலாம். அதே நேரம்

Furnished house என்னும் பொழுது நிறைமனை எனலாம்.

quarters என்பதற்குச் சேரி, பாடி, வாசத்தலம், விடுதி, வேளம்

எனவும் பொருள்கள் உண்டு.

????? வாசத்தலம் தமிழ்ச்சொல்லா?

வசி  (> வசிப்பிடம்) என்னும் சொல்லில் இருந்து வாசம் உருவானது. தலம் என்னும் தமிழ்ச்சொல்லுடன் ஸ் சேர்த்து ஸ்தலம் என்றனர். எனவே தலமும் தமிழ்ச்சொல்லே.

??? Quarters – கால்கள் என்றே குறிப்பிட்டால் என்ன?

நேர் பொருளாகப் பார்த்துக் குறிக்கக் கூடாது. தமிழில் சிந்தித்து உரிய சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

தமிழில் கால் என்றால்

     நாலில் ஒன்று ; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும் ‘வ’ என்னும் பின்ன எண்குறி ; பாதம் ; பூவின் தாள் ; அடிப்பாகம் ; எழுத்தின் கால் ; தேருருள் ; வண்டி ; கோல் ; குறுந்தறி ; நெசவுத்தறியின் மிதி ; கைப்பிடி ; தூண் ; பற்றுக்கோடு ; முளை ; மரக்கன்று ; மகன் ; இனமுறை(வம்சம்) ; பிறப்பிடம் ; வாய்க்கால் ; பிரிவு ; வழி ; நடை ; இடம் ; வனம் ; முனை ; மரக்கால் ; அளவு ; கதிர் ; மழைக்கால் ; காற்று ; வாதநோய் ; ஐம்பூதம் ; பொழுது ; செவ்வி ; தடவை ; காலன் ; கருநிறம் ; ஏழனுருபுள் ஒன்று ; ஒரு வினையெச்ச விகுதி ; ஒரு முன்னொட்டு

எனப் பொருள்கள் உள்ளன. இவற்றில் எதுவும் வீடுகள் அமைந்தபகுதியைக் குறிக்காது அல்லவா?

எனவே, கால் என்னும் பொருளில் வராமல் தங்குமிடங்களைக் குறிக்கும்  Quarters என்பதைக் குடியிருப்பு என்று சொல்வதே சரியாகும்.

Dec 15, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்

      15 December 2025      கரமுதல



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : தொடர்ச்சி)

இக்கோப்பில் இந்நிலத்தின் வடக்கு திசையில் கோயில் மனை உள்ளது என எழுதப் பெற்றுள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எனத் திசைகளைக் குறிப்பிடும் திசைப்பெயர்கள் அடுத்து வல்லினம் மிகும்

வடக்கு + திசை = வடக்குத் திசை

கிழக்கு + கடல் = கிழக்குக்கடல்

மேற்கு + சுவர் = மேற்குச்சுவர்

வடக்கு + தெரு = வடக்குத்தெரு

தெற்கு + பக்கம் = தெற்குப்பக்கம்

கிழக்கு + பகுதி = கிழக்குப் பகுதி

மேற்கு + புறம் = மேற்குப் புறம்

தெற்கு + சாலை = தெற்குச் சாலை

கிழக்கு + குழு = கிழக்குக் குழு

மேற்கு + துறைமுகம் = மேற்குத் துறைமுகம்

வடக்கு + தோட்டம் = வடக்குத் தோட்டம்

தெற்கு + தோப்பு = தெற்குத் தோப்பு

மேற்கு + திசை = மேற்குத் திசை

தெற்கு + தோட்டம் = தெற்குத் தோட்டம்

வடக்கு + கோபுரம் = வடக்குக் கோபுரம்

மேற்கு + தோரணம் = மேற்குத் தோரணம்

தெற்கு + பக்கத்தில் – தெற்குப் பக்கத்தில்

என்பனபோல் வரும்.

இவற்றைத்தான் இலக்கண நூல்கள் கூறுகின்றன. இலக்கண நூற்பாக்களை எடுத்துச் சொன்னால் பலர் தங்களுக்கு உரிய அல்ல எனக் கேளாமல் இருந்து விடுவர். எனவேதான், இலக்கண விதிகளைச் சொலலாமல் எவ்வாறு எழுத வேண்டும் என்றுமட்டும் கூறுகிறேன்.

சான்றாகத் திசைப் பெயர்கள் தொடர்பான விதிகளைப் பார்ப்போம்.

திசையொடு திசையும் பிறவும் சேரின்

நிலைஈற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்,

றகரம் னலவாத் திரிதலு மாம்பிற   

எனத் திசைப்பெயர் குறித்த நன்னூல் நூற்பா 186 கூறுகிறது.

இந்நூற்பாவில் திசைப்பெயர்ப் புணர்ச்சி பற்றி நன்னூலார் நான்கு விதிகளைக் கூறியுள்ளார்.  அவற்றினைப்்பார்ப்போம்.

1. ஈற்று உயிர்மெய்யும் கவ்வொற்றும் நீங்குதல்

முதலில் உள்ள சொல் நிலை மொழி என்றும் அதனுடன் சேரும் சொல் வருமொழி என்றும் குறிக்கப் பெறும். நிலை ஈற்று என்றால் நிலைமொழியில் உள்ள ஈற்றெழுத்து, அஃதாவது கடைசி எழுத்து.

இங்கே ஈற்று உயிர்மெய்  என்பது திசைப்பெயர்களில் கடைசி எழுத்தாக வரும்  ‘கு‘ என்பதாகும். கவ்வொற்று என்றால், கு எழுத்தில் உள்ள  ‘க்‘  ஆகும்.

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

வடக்கு + மேற்கு = வடமேற்கு

வடக்கு + திசை = வடதிசை

வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்

வடக்கு + நாடு = வடநாடு

குடக்கு + மலை = குடமலை

குடக்கு + நாடு = குடநாடு

குணக்கு + நாடு = குணநாடு

என்பனபோல், கடைசி எழுத்தான கு , அதற்கு முந்தைய எழுத்தான க் ஆகியன நீங்கி வரு மொழியுடன் இணைந்து வரும்.

2. றகர மெய் னகர மெய்யாகத் திரிதல்

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு

தெற்கு + திசை =  தென்திசை(= தென்றிசை)

தெற்கு + குமரி = தென்குமரி

தெற்கு + நாடு =  தென்நாடு = தென்னாடு

என்பனபோன்று நிலைமொழியில் உள்ள தெற்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய் ‘கு’ நீங்கி, அதற்கு முந்தைய றகரமெய் னகர மெய்யாகத் திரிந்து வரும்.

3. றகர மெய் லகர மெய்யாகத் திரிதல்

மேற்கு + நாடு = மேல்நாடு

மேற்கு + திசை = மேல்திசை (= மேற்றிசை)

என  ஈற்று உயிர்மெய் ‘கு’ நீங்கி, அதற்கு முந்தைய றகரமெய் ‘ல்’ ஆக மாறியுள்ளது.

4. ழகரத்தில் உள்ள அகரஉயிர் நீங்கி முதல் எழுத்து நீளூதல்

கிழக்கு என்பதில் ‘க்கு’ நீங்கிய பின் உள்ள ‘கிழ’ என்பதில் ‘ழ’ எழுத்தில் உள்ள அகரம் நீங்கினால் ‘ழ்’ ஆகிறது. முதல் எழுத்து நீளுதல் என்றால் ‘கி’ என்பது நெடிலாகக் ‘கீ’ என மாறுதல். எனவே,’கீழ்’ என்றாகிறது.

எனவே,

கிழக்கு + திசை = கீழ்த்திசை

எடுத்துக்காட்டிற்காகக் கூறிய இலக்கண நூற்பா போன்று இலக்கணங்கள் கூறுவதைத்தான் நாம் கூறுகிறோம்.

மேலும் சிலவற்றையும் பார்ப்போம்.

மேல், கீழ் என வருவன ஐகாரம் பெற்று வருதலும் உண்டு.

சான்று:

மேல் + நாடு = மேலை நாடு

கீழ் + கடற்கரை = கீழைக் கடற்கரை

திசைப்பெயர்கள் பிறதிசைப் பெயர்களோடும், பிறபெயர்களோடும் சேரும்போது, மேலே கூறப்பட்டவை போன்று எத்தகைய விகாரமும் பெறாமல் இயல்பாய் நிற்றலும் உண்டு.

சான்று:

தெற்கு + வடக்கு = தெற்கு வடக்கு

கிழக்கு + மேற்கு = கிழக்கு மேற்கு

வடக்கு + திசை = வடக்குத் திசை

மேற்கு + திசை = மேற்குத் திசை

அதே நேரம் திசைப் பெயருடன் திசைப் பெயரைச் சேர்க்கும் பொழுது பின்வருமாறு முதலில் குறிக்கப்பெறும் (நிலை மொழி) திசைப்பெயரில் கடைசி இரண்டு எழுத்துகளான ‘க்கு’ மறைந்து வரும்.

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு

வடக்கு + மேற்கு = வடமேற்கு

வடக்கு + திசை = வடதிசை

வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்

வடக்கு + நாடு = வடநாடு

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கும் வன்தொடர்க் குற்றியலுகரங்கள் ஆகும். குணக்கு, குடக்கு என்பனவும் வன்தொடர்க் குற்றியலுகரங்களே ஆகும்.  இவையும் திசைப்பெயர்கள். குணக்கு என்ற சொல், கிழக்குத் திசையைக் குறிக்கும்.  குடக்கு என்ற சொல் மேற்குத் திசையைக் குறிக்கும்.

ஆதலால், ‘க்கு’ நீங்கி  

குணக்கு + திசை = குண  திசை

குணக்கு + கடல் = குண கடல்

குடக்கு + திசை = குட திசை

குடக்கு + கடல் = குட கடல்

குடக்கு + மலை = குடமலை

குடக்கு + நாடு = குடநாடு

குணக்கு + நாடு = குணநாடு

திசைப்பெயர்ப்புணர்ச்சி வேறு வகையாகவும், அஃதாவது மேற்கு என்பது மேல் என்றும் கிழக்கு எ்ன்பது கீழ் என்றும் வரும்.

கிழக்கு + நாடு = கீழ்நாடு

கிழக்கு + திசை = கீழ்த்திசை

மேற்கு + உலகம் = மேலுலகம்

கிழக்கு + பக்கம் = கீழ்ப்பக்கம்

இவ்வாறாகத் திசைப்பெயர்கள் வரும் இடங்களில் எவ்வாறு எழுத வேண்டும் என அறிந்து கொண்டால் நாம் பிழையின்றி எழுதலாம்.