Nov 6, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : உம்மைத் தொடர்களில் ‘மற்றும்’ தேவையில்லை : இலக்குவனார் திருவள்ளுவன்

      16 October 2025      கரமுதல



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : தொடர்ச்சி)

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மற்றும் எனச் சேர்ப்பது தவறாகும். மற்றும் என்பதை நீக்கிப் பின்வருமாறு குறிப்பிட வேண்டும்.

தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை

ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறை

இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

உணவு கூட்டுறவு அமைச்சர்

உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை

* கால்நடைப் பேணுகை மீன்வளத்துறை

கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை

கைத்தறி, கைத்திறன், சவுளி, கைந்நூல் துறை

சவுளி என்பது தமிழ்ச்சொல்லே. (ஞ்)சவுளி என்ற உச்சரிப்பு பெற்றதும் நாம் பிற சொல்லாகக்கருதும் நிலை ஏற்பட்டது. கைந்நூல் என்பதைக் காதி அல்லது கதர் என்றே பெரும்பாலும் கூறுகின்றனர்.
பரம்பரையாக ஒரு குழித்தறியில் கையால் நெய்யப்பட்டுக் கையால் நூற்கப்பட்டு காதி நெய்யப்படுகிறது. காதி என்பது குழி என்னும் பொருள் கொண்ட இந்திச்சொல் khad என்பதில் இருந்து பிறந்தது. இந்தியில் கதர்(Khaddar) என்றும் அழைக்கப்படுகிறது.

“காதியின் ஒரே அளவுகோல் அது கையால் நூற்கப்பட்டு கையால் நெய்யப்பட்டிருப்பதுதான்” எனக் காந்தி யடிகளே கூறியுள்ளார். (மகாத்மா காந்தியின் படைப்புகள் தொகுப்பு, தொகுதி 28, 1925) ஆனால் ஓர் இசுலாமிய அம்மையார் காந்தியடிகளுக்குக் கையால் நூற்ற துணியை அன்பளிப்பாகத் தந்த பொழுது அதனைப் பெற்றுக் கொண்டு மதிப்பு மிக்கது என்ற பொருளில் குறிப்பிட்டார். நெசவுத் தொழில் தமிழ்நாட்டின்மிகப்பழமையான சிறப்பான தொழில். எனவே, காதி என்றோ கதர் என்றோ குறிப்பிடாமல் கைந்நூல் என்றே சொல்லுவோம்.

* சமூக நலம் சத்துணவுத் திட்டத்துறை

சுற்றுப்புறம் வனத்துறை

சுற்றுலா, பண்பாடு சமய அறநிலையத் துறை

செய்தி சுற்றுலாத் துறை

தகவல் தொழில்நுட்பவியல் எண்மப் பணிகள் துறை

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். (௲௨௱௬௰௧ – 1261)

என்னும் குறளில் திருவள்ளுவர் தலைவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின எனக் குறிப்பிடுகிறார். விரலே கணக்கிற்கு அடிப்படையாக உள்ளது.விரல், விரற்கடை என்பன கணக்கில் இடம் பெறும் அளவீடுகளாகவும் உள்ளன. என்பதும் விரலைத்தான் குறிப்பிடுகிறது. digital என்பதும் இலக்கம், இலக்கமுறை; சொடுக்கெண்;எண்மம்; எண்மமுறை; என்னும் பொருள்களில் பயன்படுகிறது. எனவே நாம் , Information Technology and Digital Services Department என்பதைத் தகவல் தொழில்நுட்பவியல் எண்மப் பணிகள் துறை எனச் சொல்ல வேண்டும்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு வணிகத் துறை

தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை

நகராட்சி நிருவாகம் குடிநீர் வழங்கல் துறை

நிர்வாகம் என்பது தவறு என்பதால் நிருவாகம் எனக் குறிப்பிடுகிறேன்.

நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை

* பணியாளர் பணியாட்சிச் சீர்திருத்தத் துறை

இத்துறையின் பெயரை இப்போது மனிதவள மேலாண்மைத் துறை (Human resource management department) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையர் நலத்துறை

மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை

வணிகவரி பதிவுத்துறை

வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை

பொருளியல் புள்ளியல் இயக்கம்

பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

மதிப்பீடு செயல்முறை ஆராய்ச்சித்துறை

மருத்துவம் ஊரகநலப்பணிகள் துறை

மருத்துவ மனைகள் மருத்துவக் கல்லூரிகள்

மிகப்பிற்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை

கலை பண்பாட்டுத் துறை

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்று வாரியம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு தோட்டக்கலை மலைப்பயிர் துறை

கட்டுமான வடிவமைப்பு ஆராய்ச்சி

கட்டுமானம் பேணுகை

கட்டடப் பேணுகை கட்டுமான வட்டம்

என்பன போல்தான் குறிப்பிட வேண்டும்.

பராமரிப்பு எனக் குறிக்கப்படுவனவற்றைத்தான் நான் பேணுகை எனக் குறிப்பிடுகிறேன்.

மற்றும் எனக் குறிக்காமல் சுருக்கமாக (ம) என்றும் குறிக்கின்றனர். அதுவும் தவறு.

? “மற்றும்’ என்பது தமிழ்ச்சொல்தானே? பயன்படுத்தினால் என்ன தவறு?

விடை: “மற்றும்’ என்பது மேலும், மீண்டும் ஆகிய பொருள்களைத் தரும்

தமிழ்ச்சொல்.  இதனை “உம்’ (and) என்பற்கு மற்றாகப் பயன்படுத்தக் கூடாது. மேலும்.

மற்ற.  பிற.

மற்றது.  ஏனையது.

மற்றநாள்.  மறுநாள், நாளை, மறுநாள்

மற்றபடி.  வேறுவகையில்.

மற்றவர்.  பிறர், ஏனையோர்

மற்று.  மறுபடியும், ஓர் அசைநிலை

மற்றையது.  குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று

மற்றொன்று.  பிறிதொன்று.

என்பன போல் பொருள் உள்ளனவே தவிர “உம்’ பொருள்பட எச்சொல்லும் இல்லை. மேலும் “உம்’ வரக்கூடிய இடங்களில் சான்றாக அலுவலரும் ஆசிரியரும் என்பது போல் குறிக்க வேண்டிய இடங்களில் ஆசிரியர் அலுவலர் என “உம்’ பயன்படுத்தாமல் குறிப்பதே மரபு. இது போன்ற இடங்களில் “உம்’ தொக்கி (வெளிப்படாது மறைந்து) நிற்பதால் உம்மைத் தொகை என்கிறோம். நாம் இரவு பகல், ஆடு மாடு, இயல் இசை  நாடகம், சேர சோழ பாண்டியர் என்று கூறுவோமே தவிர இரவு மற்றும் பகல் ஆடு மற்றும் மாடு, இயல் மற்றும் இசை மற்றும் நாடகம், சேரர் மற்றும் சோழர் மற்றும் பாண்டியன் எனக் கூறுவதில்லை.

அல்லது

இரவும் பகலும்

ஆடும் மாடும்

இயலும் இசையும் நாடகமும்

சேரரும் சோழரும் பாண்டியரும்

எனலாம்.

இவ்வாறு சேர சோழ பாண்டியர், இரவு பகல் என உம்மைத்தொகை வரும் பொழுது வல்லினம் மிகாது.

உம்மைத் தொகை தவிர, போன்ற, முதலிய ஆகிய என்னும் சொற்களையும் பலரும் சரியாகக் கையாள்வதில்லை.

கேள்வி: இவற்றில் என்ன வேறுபாடு உள்ளது? ஒன்று போல்தானே பயன்படுத்துகிறோம்?

விடை: பொருள் வேறுபாடின்றி அவ்வாறு பயன்படுத்துவது தவறு.

ஒன்றை அல்லது ஒருவரை மட்டும் எடுத்துக்காட்டாகக் கூறி அதனை அல்லது அவரைப் போல என விளக்கும் இடங்களில் “போன்ற’ எனக் குறிப்பிட வேண்டும்.

சான்றாக,

மதுரை போன்ற ஆற்றுப்பாசன ஊர்களில் எனக் குறிப்பிடின், ஆறுகள் பாய்ந்து நீர்ப்பாசனத்திற்கு உதவும் பல ஊர்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு, இதுபோன்ற பல ஊர்கள் உள்ளமையை உணர்த்துகிறோம்.

“முதலிய’ என்பது மேலும் தொடர்ச்சியாக வேறு உள்ளனவற்றையும் குறிப்பிடுகின்றது.

ஆதிதிராவிடர் நலத்துறை கலை பண்பாட்டுத்துறை முதலிய துறைகளில் தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கம் சிறப்பாக உள்ளது என்றால் இவ்வாறு இருக்கக் கூடிய துறைகளில் இரண்டு துறைகளை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளதாகப் பொருள்.

அதே நேரம் “ஆகிய’ என்பது முற்றாக அமைந்து விடுகிறது.

மதுரை, சேலம், சென்னை ஆகிய நகரங்கள் என்றால் இம்மூன்று ஊர்களை மட்டும்தான் குறிக்கின்றோம். இவற்றைப் போன்று (இந் நேர்வில்) மேலும் ஊர்கள் உள்ளனவாகப் பொருள் இல்லை. தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றோம்.

அல்லது சேர, சோழர், பாண்டியர் ஆகியோர் எனக்குறிக்க வேண்டும்.

உயர்திணையாய் இருப்பின் பாவலர் முதலியோர் என்பது போல் முதலியோர் எனக் குறிக்க வேண்டும்.

எனவே “மற்றும்’ என்ற சொல்லைத் தவிர்த்து இடத்திற்கேற்ற போல்

உம்மைத் தொகை

உம்மை விரி

போன்ற, போன்றன, போன்றவை, போன்றோர்

முதலிய, முதலியன, முதலியவை, முதலியோர்

ஆகிய, ஆகியன, ஆகியவை, ஆகியோர்

என இடத்திற்கேற்ற இணைப்புச் சொற்களைக் கையாள வேண்டும். இவற்றிற்கு முரணாக “மதுரை ஆகிய மாவட்டங்களில்’ “இயல் இசை நாடகம் முதலிய 3 துறைகளில்’ “சேர, சோழ, பாண்டியர் போன்ற மூவேந்தர்கள்’ எனக் குறிப்பிடுவது தவறாகும்.

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : தொடர்ச்சி)

“ஒரு ஊழியரேனும்’ எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இது தவறு

ஆங்கிலத்தில் உயிரெழுத்துக்களுக்கு முன் என்ன குறிப்பிட வேண்டும் என நன்கு அறிவோம்.

கேள்வி: ‘an’ என உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னால் சேர்ப்போம். இவ்வாறு தமிழிலும் உள்ளதா?

விடை: ஆம். அதைக் குறிப்பிடத்தான் இவ்வாறு ‘ஒரு’ என உயிர் எழுத்துகளின் முன் குறிப்பிடுவது தவறு என நினைவூட்டுகிறேன்.

ஆங்கிலத்தில் a, e, I ,o, u ஆகிய உயிர் எழுத்துகளுக்கு முன்பு மட்டுமின்றி, உயிரெழுத்து ஒலிப்புடன் தொடங்கும் சொற்களுக்கு முன்பும் an hour என்பதுபோல், ‘an’ பயன்படுத்துவோம். இல்லையேல் பெருங்குற்றமாகக் கருதுவோம். ஆனால் நாம், நம் தாய்மொழியில் தவறாகக் குறிப்பிடுவதையே பெருமையாகக் கருதுவதால், இவை பற்றியெல்லாம் கவலைப்படுவது இல்லை. இனியேனும் செம்மையாகப் பேசுவோம்! செம்மையாக எழுதுவோம்!

“ஒன்று’ என்பது உயிர் எழுத்துகளின் முன் ‘ஓர்’ எனவும், பிற இடங்களில் ஒரு எனவும் வரும் என்பதை நினைவில் கொள்வோம்.

ஓர் ஊழியரேனும் – ஓர் உலகம்

ஓர் ஆட்சியர் – ஓர் இதழ்

ஓர் ஆணை – ஓர் ஈகையாளர்

ஓர் இணையர் – ஓர் இயக்கம்

ஒரு பதிவேடு – ஒரு மருந்தகம்

ஒரு வங்கி – ஒரு திட்டம்

இவை போல் உயிரெழுத்துக்களின் முன் ஒவ்வொரு எனச் சொல்லாமல் ‘ஒவ்வோர்’ எனல் வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டு – ஒவ்வோர் அலுவலர்

ஒவ்வோர் இடம் –  ஒவ்வோர் இனம்

ஒவ்வோர் அலுவலகம்  – ஒவ்வோர் இல்லம்

ஒவ்வொரு முறை  – ஒவ்வொரு பகல்

ஒவ்வொரு திட்டம் – ஒவ்வொரு பள்ளி

ஒவ்வொரு கல்லூரி –  ஒவ்வொரு சுற்று

எனினும் உயிரெழுத்து இல்லாத இடத்திலும் “ஓர்’ எனப் பயன்படுத்தினால் தவறல்ல; மேலும் “ஒப்பற்ற’ என்று பொருள்படும் என்பர் சிலர். எனவே ஓர் கல்லூரி, ஓர் பள்ளி எனக் கூறினாலும் எக்காரணங்கொண்டும் உயிரெழுத்து முன் “ஒரு’ பயன்படுத்தக் கூடாது.

இவைபோல் “இரண்டு’ என்பதும் உயிரெழுத்துகளின் முன் ‘ஈர்’ எனவும் பிற இடங்களில் ‘இரு’ எனவும் மாறும்.

ஈர் அலுவலங்கள் –  இரு பதிவேடுகள்

ஈர் ஆண்டு / ஈராண்டு  இருவணிக மனை

ஈரைவர் – இரு மருந்தகம்

ஈரேழு  – இரு தவறு

இவைபோல் தற்பொழுது பெரும் வழக்கில் மறைந்து போயுள்ள மற்றொன்றையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

அது இது, எது என்பனவும் உயிரெழுத்துகளின் முன் முறையே அஃது இஃது எஃது என மாறும்.

அஃது அவருடையதா?

இஃது எங்கிருந்தது?

எஃது உன்னுடையது?

அஃது உலகளாவிய திட்டம்

என்றுதான் குறிக்க வேண்டும்.

அது, இது, எது, யாது ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

அது பலகை – அது சரி

இது தட்டு – இது தவறு

எது தேவை? –  எது செவ்வைப்படி?

யாது செய்வேன்

அவை இவை, எவை ஆகியவற்றின் பின்னும் வல்லினம் மிகாது.

அவை பெரிய அணைகட்டுகள்

இவை சிறிய திட்டங்கள் –  எவை சிறப்பானவை?

* ஒவ்வொரு என்பது பற்றிப் பார்த்தோம் அல்லவா? ஒவ்வொரு என்பதன் பின் வல்லினம் மிகாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொருத் திட்டம், ஒவ்வொருத்தடவை, ஒவ்வொருப் பேரூராட்சி, ஒவ்வொருத் துறை என வல்லின எழுத்தைச் சேர்த்து எழுதுவதும் தவறு ஆகும்.

ஒவ்வொரு தொழிற்பேட்டை

ஒவ்வொரு பதிவேட்டிலும்

ஒவ்வொரு துறையிலும்

ஒவ்வொரு பிரிவிலும்

ஒவ்வொரு கடிதமும்

என வரும்.

* இக்கோப்பில் “ஒவ்வொரு பிரிவுகளிலும்” என உள்ளது. ஒவ்வொரு என்பது ஒருமையில்தான் முடிய வேண்டும். அனைத்துப் பிரிவுகள் அல்லது எல்லாப் பிரிவுகள் எனப் பன்மையில் சொல்லலாம். (ஒவ்வொரு பூக்களுமே’ என்பது தவறு. ஒவ்வொரு பூவும் அல்லது எல்லாப் பூக்களும் எனக் கூற வேண்டும்.)

* குற்றவாளிகள் அன்று என உள்ளது.

அஃறிணை ஒருமைக்குத்தான் ‘அன்று’ பயன்படுத்தப் பெற வேண்டும். சான்று:

முறையான கோப்பு அன்று

உரியமடல் அன்று

அஃறிணைப் பன்மையாயின் ‘அல்ல’  பயன்படுத்தப் பெற வேண்டும்.

தூய்மையான அலுவலகங்கள் அல்ல.

செவ்வைப்படிகள் அல்ல.

சரியானவை அல்ல.

* உயர்திணை ஒருமைக்கு அல்லன்/ அல்லள்

என்றும் உயர்திணைப்பன்மைக்கு ‘அல்லர்’ என்றும் பயன்படுத்த வேண்டும்.

குற்றவாளிகள் அல்லர்.

சுறுசுறுப்பாகப் பணியாற்றுபவன் அல்லன்

விரைவாகத் தட்டச்சிடுபவன் அல்லன்

நேர்மையான அலுவலர் அல்லர்

என்பன போல் வரவேண்டும். ஆனால் உயர்திணையில் அல்ல என்றே பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவை வினைமுற்று ஆகும். எனவே, இவ்வினைமுற்று ஒன்றன் பால் ஆயின் “அன்று’ என்றும் பலவின் பால் ஆயின் அல்ல என்றும் ஆண்பால் ஆயின் அல்லன் என்றும் பெண்பாவின் அல்லன் என்றும் பலர்பால் ஆயின் அல்லர் என்றும் வரும்.

கேள்வி: “அல்ல’ என்று சொல்லாமல் இல்லை என்று சொன்னால் என்ன?

விடை: கண்டிப்பாகக் கூறக் கூடாது. பொருளே மாறுபடும்.

இவை கோப்புகள் இல்லை.

என்று சொன்னால் இவை கோப்புகள் இல்லை, வேறு எவையோ எனப்பொருள்படும்.

இவை நிதிக் கோப்புகள் அல்ல என்றால் இவை நிதி தொடர்பான கோப்புகள் அல்ல; வேறு பொருள் தொடர்பான கோப்பு எனப் பொருள்படும்.


எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : இலக்குவனார் திருவள்ளுவன்

 

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 : Conference  Call – பன்முகஅழைப்பு : தொடர்ச்சி)

என்று உள்ளது

“என’ என்னும் இடைச்சொல் அடுத்து வல்லின எழுத்து மிகுதியாய் வரவேண்டும். இவ்வாறு அடிக்கடி வருமிடங்களை நினைவில் கொண்டால் தவறின்றி எழுதலாம்.

எனத் தெரிவிக்கிறேன்

எனக் கூறினான்

எனச் சொல்லேன்

எனப் படிக்க வேண்டும்

எனத் திட்டமிடு

எனத் தெளிவாகக் கூறு

எனத் தெரிவித்துக் கொள்கிறேன்

எனப் பாராட்டினார்

எனக் குறிப்பாணையில் குறிக்கப்பட்டுளளது

எனச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனப் பெருந்தலைவர் தெரிவித்தார்

எனக் கேட்டார்

எனப் பார்த்தேன்

எனச் சொன்னார் எனச் சொல்லப்பட்டது

எனப் ‘பிரதமர்’

எனத் தலைமையமைச்சர்

எனப் பாதுகாப்பு அமைச்சர்

எனத் துறைத் தலைவர்

எனத் துறைத் தலைமைக் கண்காணிப்பாளர்

எனத் திட்டவட்டமாக

எனத் தகவல்

எனப்பொதுப்பணித்துறை அமைச்சர்

எனக் கல்வியமைச்சர்

எனச்சொன்ன உயர்நீதிமன்றம்

எனச் சிந்திக்க வேண்டும்.

இவற்றின் அடிப்படையில் என்பதை என்னும் சொல்லிற்கு அடுத்து வல்லினம் மிகும்

இச்சொல் அடிக்கடிச் செய்திகளில் இடம் பெறுவதால் நினைவில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

என்பதைத் தெரிவிக்கிறேன்

என்பதைக் கேட்டுக் கொள்கிறேன்

என்பதைப் பாராட்டினார்

என்பதைச் சொன்னார்

என்பதைப் பகர்ந்தனர்.

இதைப்போல் “இனி’ என்னும் இடைச்சொல்லிற்குப் பின்னும் வல்லினம் மிகும்.

இனிக் கடிந்து பேசாதே

இனிச் சரியாகச் செய்

இனித் திட்டமிட்டுச் செயலாற்று

இனிப் பாடலாம்

இனிப் பின்பற்ற வேண்டும்

இம்முகவரியில்

பெரியக்குளம்

எனக் குறிக்கப்பட்டுள்ளது தவறாகும்.

பெரியகுளம் என்பதே சரி

சிறிய. பெரிய. சிறு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

சிறிய திட்டம்       சிறுசேமிப்பு

சிறு பாசனம்        சிறு பேழை

பெரிய பதவி       பெரிய குடிசை

சிறு கடை    பெரிய துறை

சிறு பெட்டிக்கடை       சிறு தெய்வ வணக்கம்

பெரிய பண்ணை

பெரிய தொல்லை

என்பன போல் வரும்.

இவைபோல் நல்ல. கெட்ட என்பவற்றின் பின்னும் வல்லினம் மிகாது

நல்ல தலைமைநல்லதிட்டம்

நல்ல புத்தகம் கெட்ட கனவு

நல்ல பாம்பு  நல்ல பயிர்

நல்ல துறை  கெட்ட குவளை

காசாளரோ அல்லது கணக்கரோ பொறுப்பேற்க வேண்டும் என இவ்வலுவலக ஆணையில் உள்ளது.

இங்கு “ஓ’ அல்லது என்னும் பொருளில் கையாளப்படுகிறது. எனவே அல்லது என்பதைச் சேர்க்க வேண்டா.

காசாளரோ கணக்கரோ பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டால் போதும். இல்லையேல்இ “காசாளர் அல்லது கணக்கர் பொறுப்பேற்க வேண்டும்’

எனல் வேண்டும்

எனவே.

செயலரோ துணைச் செயலரோ

ஊதிய விடுப்போ ஊதியபின் விடுப்போ

மாற்றுப் பணியிலோ பசுரப் பணியிலோ

தட்டச்சரோ சுருக்கச்சரோ

இசைவுடனோ இசைவின்றியோ

ஆசிரியப் பணியாளரோ ஆசிரியரல்லாப் பணியாளரோ

பிணையிலோ பிணையின்றியோ

ஊதியத்துடனோ ஊதியமின்றியோ

என “அல்லது’ என இடையில் சேர்க்காமல் குறிப்பிடுவது முறையாகும்.

Oct 5, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 : Conference Call – பன்முகஅழைப்பு : இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10 : conference, seminar, symposium – தமிழில் . . . -தொடர்ச்சி)

Conference  Call என்றால் என்ன?

 Conference  Call என்றால் நேர் பெயர்ப்பாகப் பலரும் மாநாட்டு அழைப்பு என்றே பயன்படுத்துகிறார்கள். சிலர் கலந்துரையாடல் அழைப்பு என்கிறார்கள். சிலர் கூட்டுத் தொலைபேசி உரையாடல் என்கிறார்கள். இது பேசுவதாகவும் இருக்கலாம், காணுரையாகவும் இருக்கலாம். இடைக்கால இலத்தீனிலும் இடைக்கால் ஃபிரெஞ்சிலும் con- என்றால் உடன் எனப் பொருள். Fero  என்றால் பண்படுத்தப்படாத  அல்லது ஒழுங்கு முறையில்லாத எனப் பொருள்கள். நேர் பொருள் ஒத்து வரவில்லை.

கூட்டத்தில் தலைவர் இருந்து உரைகளை  ஒழுங்குபடுத்துவதற்கு வாய்ப்பில்லாததைக் குறிப்பதாகக் கொள்ளலாம். எனினும் நாம் பயன்பாடு கருதி உடன் பேசுதல் எனக் கொள்ளலாம். இதனடிப்படையில் Conference  Call என்பதைப் பலருடனும் சே்ர்ந்து பேசும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு பன்முக அழைப்பு எனலாம்.

?. மூன்றுபேர் மட்டும் பேசினாலும் பன்முக அழைப்புதானா?

மூவர் இணைந்து பேசுவதை மும்முக அழைப்பு, நால்வர் இணைந்து பேசுவதை நான்முக அழைப்பு, ஐவர் இணைந்து பேசுவதை ஐம்முக அழைப்பு என்பதுபோல் சாெல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அது தேவையில்லை. இருவருக்கு மேல் சேரும்பொழுதே பலர் எனலாம். ஆதலின் பொதுவாகப் பன்முக அழைப்பு என்றே சொல்லலாம்.

? Seminar, Symposium, Summit என்று அனைத்தையும் கருத்தரங்கம் என்று சொல்கிறோமே

அப்படியில்லை.

Seminar கருத்தரங்கம்

Symposium       உரையரங்கம்

Summit- உச்சி மாநாடு

என்று சொல்லி வருகிறோம்

symposium என்பது sumpínō என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவான சொல். sum-என்றால் சேர்தல்/கூடல்  pínō என்றால் குடித்தல், அஃதாவது     மது குடித்தல்.  இதன் பொருள் கூடிக் குடித்தல். அஃதாவது மது விருந்து. பின்னர் அறிவுசார் விவாதத்துடனும் குடியுடனும் கூடும் ஒரு கூட்டத்தைக் குறித்தது. இதுவே, ஒரு தலைப்பைப் பற்றிய விவாதத்திற்கான கூட்டம் என்றானது. குறிப்பாகப் பங்கேற்பாளர்கள் விளக்கக்காட்சிகளை வழங்கும் ஒரு கூட்டம்.

மது விருந்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிவுசார் கருத்துகள் இடம்பெறும் கூட்டம் என்பதால் கருத்தரங்கம் எனலாம்.

இவை தொடர்பில் வேறு சில கருத்துகளையும் பார்ப்போம்.

பொதுவாகக் கருத்தரங்கம் என்றால் பலரது கருத்துகளுக்கும் இடம் இருக்க வேண்டும் .சிலர் தாங்களே உரையாளர்களை முடிவெடுத்துக் கொண்டு பங்கேற்பாளர்களும் கருத்துளைத் தெரிவிக்கலாம் எனச் சொல்லி விட்டு நடைமுறையில் தங்களுக்கு வேண்டிய சிலரை மட்டும் பேசச்சொல்லி விட்டுக் கருத்துப்பகிர்வுகளுக்கே இடம் தர மாட்டார்கள். இவற்றை யெல்லாம் உரையரங்கம் என்று சொல்லலாம்.  கருத்தரங்கம் என்பது பொருந்தாது. பலரும் உரையாற்றவும் கருத்துகளைத் தெரிவிக்கவும் வாய்ப்புள்ள கூட்டத்தையே கருத்தரங்கம் எனலாம்.

Summit என்றால் உச்சி என்றும் மலை முகடு / மலையுச்சி என்றும் பொருள்கள்.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளின் உயர்நிலைத் தலைவர்களுக்கு அல்லது அவர்களின் சார்பாளர்களுக்கு இடையே நடைபெறும் முதன்மையான கூட்டம் அல்லது தொடர்ச்சியான பல கூட்டங்கள்  உச்சி மாநாடு எனப்படுகிறது. மாநாடு என்பது தனக்குரிய சிறப்புப் பொருளை இழந்து பொதுவான பொருளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் கலந்தாடல் கூட்டமும் மாநாடு எனப்படுகிறது. இப்போதைய பயன்பாட்டில் உள்ளவாறு Summit- உச்சி மாநாடு என்றே சொல்லலாம்.